அய்யா வைகுண்டர் தலைமை பதியில் எம்.ஏ. பேபிக்கு வரவேற்பு!
நாகர்கோவில், ஜூலை 1 - அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபிக்கு, பால பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட தலைமைப் பதியின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, செவ்வாயன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். பயணத்தின் ஒரு பகுதி யாக, கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியான, அன்பு வனத்திற்குச் சென்று மகா குரு சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை மரி யாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, எம்.ஏ. பேபி, அவரது மனைவி பெட்டி லூயிஸ் ஆகியோருக்கு பால பிரஜாபதி அடிகளார் மற்றும் அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் தர்ம ரஜினி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நீலாம்பரன் உடனி ருந்தார்.
வைகுண்டர் விரும்பிய சமத்துவ சமுதாயம் அமைக்கப் பாடுபடுவோம்!
இந்த சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களுக்கு எம்.ஏ. பேபி பேட்டி அளித்தார். அப்போது, “மாமேதை காரல் மார்க்ஸ், சோசலிச சமுதாயம் குறித்து பேசும் முன்னரே சமத்துவ சமாஜம் என்ற முற்போக்கு கொள்கையை பேசியவர் அய்யா வைகுண்டர். தனது வாழ்நாளில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக களம் கண்டு போராடியவர். கேரளத்தின் ஸ்ரீ நாராயணகுரு, கோவிலில் சிலைக்கு பதிலாக கண்ணாடியை நிறுவினார். ஆனால், அவருக்கும் முன்னரே அதைச் செய்து காட்டி, மனிதன் தன்னைத்தானே மாற்றிக் கொண்டு அனைவரும் சமம் என எண்ண வேண்டும் என்பதை வைகுண்டர் வலியுறுத்தினார். அந்த வகையில், ஐயா வைகுண்டர் காண விரும்பிய சுரண்டல் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்” என்று எம்.ஏ. பேபி தெரிவித்தார்.