நெசவாளர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் தீர்மானம்
திருவண்ணாமலை, அக். 30- திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நெசவாளர் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ஆரணியில் நடை பெற்றது. சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், பொருளாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் சைதை தமிழ்ச்செல்வன், சேவூர் பால்ராஜ், தியாக ராஜன், மெய்யூர் சந்திரசேகரன், சம்பத், ரங்கநாதன், திவ்யா (கணினி மையம்) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.4 லட்சம் மானிய வீடு வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பய னாளர்களுக்கு விரைவாக வீடு வழங்கிட வேண்டும் என்று கோரி, மாவட்ட கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பருவ மழை காலத்தில் ஜாக்காட் பெட்டிகள், டிசைன் அட்டை களின் ஈரப்பதம் மற்றும் தறி கால்குழியில் மழைநீர் தேங்குவதால் நெசவாளர்கள் தறி நெய்ய முடியாமல் வேலை மற்றும் வருமான இழப்பை சந்திப்பதால், அவர்க ளுக்கு பருவ மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறையாவது குறைதீர்வு கூட்டம் நடத்திட வேண்டும் என்றும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பட்டு சேலை சிறு உற்பத்தியாளர்களின் நெசவு மூலப்பொருட்களான கோராப்பட்டு மற்றும் ஜரிகை விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
