tamilnadu

img

‘இடதே மாற்று’ என மக்களுக்கு சொல்வோம்

ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது  அகில இந்திய மாநாடு எழுச்சியோடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் தோழர்கள் பெரும் உற்சாகத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மாநாட்டிற்கான வழக்கமான ஏற்பாடுகளோடு, இம்முறை ஒரு  புதுமையையும் இணைத் திருக்கிறார்கள் மதுரை தோழர்கள். ஒவ்வொரு கட்சி உறுப்பினர்  வீடுகளிலும் ’கட்சி உறுப்பினர் பங்களிப்பு’ எனும் வாசகத்துடன் புதிதாக  ஒரு உண்டியல் வீற்றிருக்கிறது. ஆம். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒரு தேனீயைப் போல தங்களால் இயன்றதை சேகரித்து தங்கள் பங்களிப்பை மாநாட்டின் பணிகளுக்காக அளிக்க காத்திருக்கிறார்கள். 

கொண்டாட்டமாகவும், ஆர்ப்பரிப்பு முழக்கங்களோடும் மாநாடுகளை நடத்துகிற, அதற்காக கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் முதலாளித்துவக் கட்சிகளுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய முயற்சி சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் இதுதான் கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிகழ்ச்சிகளுக்கு தேவையான நிதியை உழைக்கும் மக்களிடத்திலிருந்து திரட்டுகிறது. பெரும் நிறுவனங்களிடம் நன்கொடை பெறக்கூடாது எனும் விதியை கறாராக அமலாக்குவதும் தேர்தல் நன்கொடை எனும் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவத்திற்கான சான்றுகளாகும்.

கட்சியின் அச்சாணி...

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘போராடுவோம் தமிழகமே’ எனும் பிரச்சார  இயக்கத்தில் திருச்சியை நோக்கி சென்ற பிரச்சாரக் குழுவிற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நேரமென்பதால் பேருந்து நிலையத்தில் நல்ல கூட்டம் இருந்தது. பிரச்சார இயக்கத்தில் வந்த தோழர்களுக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவித்த னர் சில பெண்கள். யார் இவர்கள் என கேட்டபோது பேருந்து நிலையத்தில்  வெள்ளரி விற்கும் பெண்கள் இவர்கள் என தோழர்கள் பதில் அளித்தனர். தங்கள்  உழைப்பிலிருந்து கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை உணர்வு மேலிட கம்யூனிஸ்ட் கட்சிக்கு  அளிக்கும் அத்தகைய எளிய உழைக்கும் மக்கள் தான் கட்சியின் அச்சாணியாக இருக்கிறார்கள்

திருவண்ணாமலையில் வெகுஜன வசூல் இயக்கத்தில் பங்கேற்ற போது கிடைத்த ஒரு அனுபவம் சுவாரசியமானது. அண்ணாமலையார் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில் உண்டியலோடு சென்று கொண்டிருந்தோம். கோவிலுக்குள்ளே இருந்து வந்த பக்தர் ஒருவர் கட்சி உண்டியலில் பணத்தை போட்டவாறே சொன்னார். கோவிலுக்குள்ளே இருக்கும் உண்டியலில் செலுத்தும் காணிக்கையென்பது எங்கள் நம்பிக்கைக்கானது. ஆனால் உங்கள் உண்டியலில் நாங்கள் அளிக்கும் நிதி என்பது மக்களுக்காக அர்ப் பணிப்போடு உழைக்கும் கம்யூனிஸ்டுகளுக்கான அங்கீகாரமாகும் என்றார். கம்யூ னிஸ்டுகளை நேசிக்கும் இத்தகைய சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டுவதை கட்சி பெருமிதமாக கருதுகிறது.

வீரிய வித்துக்கள்

நீலகிரி மாவட்டக்குழு அலுவலகத்தில் பணியாற்றும் தோழர் பி.கே.மொஹ்சீன். இவர் ஒரு முழுநேர ஊழியராவார். பத்து வயதான அவரது மகள் நிஷா பர்சானா ஒரு அகால விபத்தில் மரணமடைந்த நேரத்தில், சில நாட்களுக்கு பிறகு அவரது சகோதரி மாவட்டக்குழு அலுவலகத்துக்கு ஒரு உண்டியலோடு வந்தார். ‘இது என் தங்கச்சியோட சேமிப்பு உண்டியல். ஒவ்வொரு ஆண்டும் தங்கையின் சேமிப்பிலிருந்து அவளுக்கு பிடித்தமான ஒன்றை வாங்குவோம். ஆனால் சமீபத்தில் அவள் மரணமடைந்து விட்டாள். அவளுக்கு நம்ம கட்சியை ரொம்பப் பிடிக்கும். எனவே அந்த சேமிப்பை கட்சிக்கு தரலாம்னு கொண்டு வந்திருக்கேன்’ என சொன்னபோது கலங்கி துடித்துப் போனோம். நிஷா பர்சானா போன்ற ஆயிரமாயிரம் வீரிய வித்துக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமைகளில் ஒன்றாகும். 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மாநிலம் முழுவதும் மக்களிடம் சென்று நிதி சேகரிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்துகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. உழைக்கும் மக்களும் இதர பகுதியினரும் இன்முகத்தோடு தங்களால் இயன்றதை கட்சிக்கு அளிக்கிறார்கள். ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் சந்தையில் வெவ்வேறு மதிப்பு இருக்கும். ஆனால் மக்கள் அளிக்கும் தொகை வெவ்வேறாக இருந்தாலும் கூட  அவற்றின் மதிப்பை சமமாகவே பாவிக்கிறது கட்சி.  

மக்களிடமிருந்து மக்களுக்கு

மக்களிடமிருந்து மக்களுக்கு என்பதே கம்யூனிஸ்டுகளின் தாத்பரியம். எனவே தான் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடும் கட்சி உழைக்கும் மக்களிட மிருந்தே நிதியை திரட்டுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எளிய உழைக்கும் மக்கள் தருகிற சிறு, சிறு பங்களிப்போடும், கட்சி உறுப்பினர்களின் உணர்வு ரீதியான உதவி களோடும் நடைபெறும் மதுரை மாநாடு இந்திய மக்களுக்கான அரசியல் நம்பிக்கையை விதைக்கும் மாநாடாக அமையப் போகிறது.  நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார கட்டமைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், கட்சியின் மாநாடுகளுக்கும் ஒரு முக்கியப் பாத்திரம் உள்ளது. ஏற்கெனவே மதுரை இரண்டு அகில இந்திய மாநாடுகளை கண்டிருக்கிறது

1953இல் நடைபெற்ற மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வை, உற்சாகக் கொண்டாட்டத்தை தோழர் என்.சங்கரய்யா உணர்ச்சிகரமாக நினைவு கூர்வதை கேட்கும் போது அதை காணும் வாய்ப்பு  இல்லையே எனும் ஏக்கம் நமக்குள் ஊற்றெடுக்கும். 1972 ஆம் ஆண்டிலும் மதுரையில் சிபிஎம் அகில இந்திய மாநாடு எழுச்சியோடு நடைபெற்றிருக்கிறது. அவற்றிலெல்லாம் பங்கேற்க கிட்டாத வாய்ப்பு தற்போது நமக்கு கிடைத்திருக்கிறது. கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை அனைத்து வகையிலும் வெற்றி பெறச் செய்ய அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். இடது அரசியல் பாதையே மக்களுக்கான மாற்று என்பதை மக்களுக்கு சொல்வோம்.