மதுரை:
நெடுஞ்சாலை தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்தவேண்டுமென்ற உணர்வுப்பூர்வ முழக்கங்களுக்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு வந்துள்ள நாளில் (சனிக்கிழமை) அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மதுரைக்கு வந்துள்ள நிலையில் பேரணியை அனுமதிக்க முடியாது எனக் காவல்துறை கூறிய நிலையில், சாதுர்யமாக பேசி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பிக்கொண்டே மாநாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர்.மாநாட்டு அரங்கில் சங்கக் கொடிய மாநிலத் தலைவர் ம.பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்கக் கொடியை மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், அகில இந்திய அரசு ஊழியர் சங்கக் கொடியை அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.அன்பரசு ஆகியோர் ஏற்றினர்.தொடர்ந்து தியாகிகளுக்கு பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர். ஆ.செல்வத்தின் வரவேற்புரையோடு தொடங்கிய மாநாட்டை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் சு.கண்ணன் துவக்கிவைத்தார். வேலையறிக்கையை பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், மாநிலப்பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் உள்ளிட்ட சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டை நிறைவு செய்து மு.அன்பரசு பேசினார். ஏ.சோலையப்பன் நன்றி கூறினார். மாநாட்டில் பேசிய மாநிலத் தலைவர் ம.பாலசுப்பிரமணியன், “பிப்.2-ஆம் தேதி முதல்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி மறியல்-சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளனர். அதில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் முழுமையாக பங்கேற்கும்” என்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் பேசுகையில், “ தமிழக முதல்வர் அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம். தவறும் பட்சத்தில் திட்டமிட்டி முதல்வர் அழைத்துப்
பேசும்வரை “மறியல்-சிறை நிரப்பும் போராட்டம் தினம்தோறும் நடத்துவோம்” என்றார்.