இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில அளவிலான தடகள தொடரின் 6-வது சீசன் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சனியன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த தடகள தொடரின் முதல் நாளில் திருச்சி ஸ்பார்க் கழகம் மற்றும் மதுரை லேடிடோக் கல்லூரி ஆதிக்கம் செலுத்திய நிலையில், நிறைவு நாளான ஞாயிறன்று திருச்சி ஸ்பார்க் கழக மாணவர்களின் தொடர் ஆதிக்கத்தால் அனைத்து பிரிவு ஆட்டங்களும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
100 மீ ஓட்டப்பந்தயம் - மதுரை மாணவி அசத்தல்
தடகள பிரிவின் நட்சத்திர விளையாட்டான 100 மீ ஓட்டப்பந்தயத்தில் (யு -18) மதுரை லீசாட்லியர் பள்ளி மாணவி யுகதி ஸ்ரீ 12:89 வினாடியில் 100 மீட்டரை நிறைவு செய்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். கே.எஸ்.ஏ கிளப்பைச் சேர்ந்த அத்மிஹா (13:17 வி) இரண்டாவது இடத்தையும், தேனி வேலம்மாள் பள்ளி மாணவி காவியா (13:33 வி) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல மகளிர் 100 மீ (யு-12) பிரிவில் சென்னை ரன்பேர்ட் மாணவி ரக்ஷிதா (14:09 வி) முதலிடமும், தேனி மாணவி ஜெயஸ்ரீ (14:51 வி), கோவை ஜிஆர்டி பள்ளி மாணவி ஷிவானி (14:61 வி) 2-வது, 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆடவர் குண்டு எறிதல்
ஆடவர் குண்டு எறிதலில் திருச்சி ஸ்பார்க் கழக மாணவன் தருண் 12.64 தூரம் வீசி முதலிட அந்தஸ்துடன் சாதனை படைத்தார். ஓ.ஜி.எப் கிளப்பைச் சேர்ந்த சந்தோஷ் (11.90) இரண்டாவது இடத்தையும், திருச்சி ஸ்பார்க் கழக மாணவன் பிரவீன் குமார் (10.98மீ) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் குண்டுஎறிதல்
மகளிர் குண்டு எறிதல் (யு-12) பிரிவில் திருச்சி ஸ்பார்க் கழக மாணவி துர்கா 7.57 மீ தூரம் வீசி முதலிடம் பெற்று சாதனை படைத்தார். சிவரஞ்சனி (தனிநபர்) இரண்டாவது இடத்தையும் (5.70 மீ), மதுரை வாலிபர் சங்க விளையாட்டு கழக உறுப்பினர் விஜயலக்ஷ்மி (5.68 மீ) மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இதேபோல 16-வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் குண்டு எறிதல் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) பெரம்பலூர் பிரிவைச் சேர்ந்த அபி என்ற மாணவி 9.09 மீ தூரம் வீசி முதலிடம் பிடித்தார். SDAT மதுரை பிரிவைச் சேர்ந்த மணி முத்து என்ற மாணவி 8.73 மீ தூரம் வீசி 2-வது இடத்தையும், திருச்சி ஸ்பார்க் கழக மாணவி பிரகல்யா (8.40 மீ) 3-வது இடத்தையும் பிடித்தனர். 18 வயதிற்குட்டோருக்கான குண்டு எறிதல் பிரிவில் திருச்சி ஸ்பார்க் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த தேவதர்ஷினி 10.89 மீ தூரம் வீசி முதலிடம் பிடித்தார். SDAT - பெரம்பலூர் மாணவி சுந்தரி (10.58 மீ) 2-வது இடத்தையும், ஷீபா (10.49 மீ) என்ற அரசுப்பள்ளி மாணவி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
நீளம் தாண்டுதல்
மகளிர் நீளம் தாண்டுதல் (யு-18) பிரிவில் காவியா (5:32 மீ) முதலிடமும், ஆரோக்ய எப்சியா டெசிலி (4.71 மீ) என்ற மாணவி 2-வது இடத்தையும், சங்கீதா (4.70 மீ) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
நடைப்போட்டி
ஆடவர் 5000 மீ நடைபோட்டியில் மதுரையைச் கணேசன் முதலிடம் பிடித்து அசத்தினார்.பரமக்குடியைச் சேர்ந்த சந்தியாஹூ 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஜெகன் 3-வது இடத்தையும் பிடித்து அசத்தினர். மகளிருக்கான நடைபோட்டியில் மதுரையைச் சேர்ந்த மீனா முதலிடமும், திருச்சி மாணவிகள் காவியா, ஸ்நேகா ஆகியோர் 2-ஆம் மற்றும் 3-ஆம் இடத்தை பிடித்தனர்