மதுரை:
தகுதியற்ற பேராசிரியர்களை பணியில் வைத்திருக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மீண்டும் எச்சரித்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் என்இடி /எஸ்இடி தேர்வுகளில் தகுதி பெற்ற பேராசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியது.இந்த சுற்றறிக்கையின் படி அனைத்து பல்கலைக்கழகங்களும், தங்களது உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.இந்நிலையில் குறைவான ஊதியத்தில் தகுதியற்ற பேராசிரியர்களைக் கொண்டு கல்லூரியில் பாடம் நடத்தப்படுவது குறித்து புகார்கள் வருவதாகக் கூறியுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 113 உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.