tamilnadu

img

சென்னையுடன் போட்டியிடுகிறதா மதுரை?

மதுரை:
மதுரையில் கொரோனா பாதிப்புதொடங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான் தொடங்கியது. 500-ஐ தொட்டது. அதற்குப் பின் மிகவேகமாக மூன்றாயிரத்தைக் கடந்துவிட்டது. சென்னையின் மக்கள் தொகை, அடர்த்தி ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் மதுரையில் மக்கள் தொகை, அடர்த்தி பல மடங்குகுறைவு. மதுரையில் 100 பேர் பாதித்தால் சென்னையில் 1000 பேர் பாதிப்பதற்கு சமம். ஆனால் சென்னைக்கு இணையாக மதுரையிலும் பாதிப்பு வேகம் உள்ளது.

அதாவது ஏப்.21-ஆம் தேதி சென்னை பாதிப்பு 350 ஆக இருந்தது.11 நாள் கழித்து 1000-ஐ தொட்டது. மதுரையில் ஜூன் 10-ஆம் தேதி 343 ஆக பாதிப்பு இருந்தது. ஆயிரத்தை ஜூன் 24-ஆம் தேதி (1,073) தொட 15 நாள் தேவைப்பட்டது. அதன் பின் ஏற்பட்ட மாற்றம் தான் அதிர்ச்சி தருகிறது. மே 3-ஆம் தேதி 1,458 ஆக இருந்த சென்னை பாதிப்பு, அடுத்த 5 நாளில் மே 5-ஆம் தேதி 3,043 ஆகஅதிகரித்தது. அதே போன்று ஜூன்26-ஆம் தேதி 1,477 ஆக இருந்தமதுரை பாதிப்பு ஆறு நாளில் மூன்றாயிரத்தை (3,133) தாண்டிவிட்டது. ஜூலை 3-ஆம் தேதி 3,423 ஆக அதிகரித்துவிட்டது.குறிப்பாக கடந்த 12 நாளில் மட்டும் 2,476 பேரை வைரஸ் தாக்கியுள்ளது. அதேபோல இறப்பும் அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்த போது, அங்கு தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. ஆனால் தற்போது மதுரை அதே 3 ஆயிரம் பாதிப்பைக் கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 51 ஆகஉயர்ந்துள்ளது. இதுவரை 450 பேர் குணமடைந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை தடுமாறுகிறதா?
கொரோனா பரவல் மதுரையில் அதிகரித்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனா சிறப்பு வார்டில்என்னதான் நடக்கிறது என்று விசாரித்தபோது கொரோனா நோயாளிகளுக்கு முதலில் தேவை மனநல சிகிச்சை. காலையில் மாத்திரை, உணவு, மாலையில் மாத்திரை, உணவு, இரவு உணவு இவை மட்டும் அவர்களுக்கு போதுமானதல்ல. அவர்கள் அச்சத்தில் உள்ளனர். மனநல சிகிச்சை அவர்களுக்கு அவசியமாகிறது.ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக வியாழக்கிழமை இரவு மதுரைஅரசு மருத்துவமனைக்கு வந்துள் ளார். (அவருக்கு எப்போதும் மூச்சுத்திணறல் உண்டு). உடனடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவும் வந்துவிட்டது. ஆனால்,அவர் வீட்டிற்குச் செல்லமுடியாதநிலையில், அவர் மருத்துவமனையிலேயே உள்ளார். ஆக்சிஜன் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்த சமயத்தில் மற்றொரு நோயாளி சீரியஸான நிலையில் ஆக்சிஜனுக்கு தவித்துள்ளார். இவருடைய ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து சீரியஸானநோயாளிக்கு மாட்ட முடிவு செய்துள் ளனர். உசிலம்பட்டி நோயாளி கதற, அவருக்கு தெரிந்த மருத்துவமனை ஊழியர் உதவிக்குவர அவருக்கு வைக்கப்பட்டிருந்த ஆக்ஜிசன் சிலிண்டர் பறிபோகாமல் தப்பியது. அநேகமாக அந்த நோயாளி திங்கள் கிழமை தான் வீடு திரும்புவதற்கு வாய்ப்புள்ளது.

தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மொத்தம் 150 டெக்னீஷியன்களே இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் அதிகபட்சம் 20 பேரே கொரோனா டெஸ்ட் எடுப்பதில் திறமை மிக்கவர்களாம். இந்தஇருபது பேர் தான் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வு என்பதே அளிக்கப்படவில்லை. கூடுதல் டெக்னீஷியன் களுக்கு கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு அதை கையாள்வதற்கு பயிற்சியளிக்கவில்லையெனில் அரசு மருத்துவமனையின் பாடு திண்டாட் டம் தான். 

பரிதாபத்திற்குரிய சமையலர்கள்
மதுரை மருத்துவமனையில் சுமார் 50 சமையலர்கள் மட்டுமேஉள்ளனர். இவர்கள் இரண்டு ஷிப்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மூன்று மருத்துவமனைகளுக்கும் இவர்கள் தான் சமைக்கவேண்டும். கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில் அனைவருக் கும் உணவு தயாரிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். இதற்கும் மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும்.மதுரை மருத்துவமனையில் தற்போது 1,300 முதல் அதிகபட்சம் ,700 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. கொரோனா சோதனை முடிவுகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு, அதை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு, சென்னை மற்றும் அதிகாரிகளுக்கு இளையதளத்தில் அனுப்புவதற்கும் போதுமான பணியாளர்கள் இல்லை. ஒட்டு மொத்தத்தில் மதுரைமருத்துவமனை தடுமாறிக்கொண் டிருக்கிறது.

இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உள்பட மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் செல்லி அம்மன்கோவில் தெருவில் வசித்துவந்தவர் அர்ஜூனன் (55) இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இராமநாதபுரத்தைச்சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சனிக் கிழமை இரு உயிரிழநததையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 29 பேருக்கு சனிக் கிழமை கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (45). இவருக்கு கடந்த ஜூன்.26 ல் உடல் நிலை சரியில்லாமல் போனது.இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண காய்ச்சல் எனக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பார்வதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும்அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளர். அங்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஜூன். 30-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் பார்வதியின் உடலை அடக்கம்செய்துள்ளனர். இந்த நிலையில்ஜூலை 3-ஆம் தேதி பார்வதிக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளதாக பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனால், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அச்சமடைந்துள்ளனர்.