குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
சென்னை, அக். 22 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ‘குரூப்- 4’ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறைகளில் காலியாக இருந்த 4,662 பணி யிடங்களுக்கு கடந்த ஜூலை 12 அன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்கள், உதவியாளர்கள், வனக் காவலர், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங் களுக்காக இத்தேர்வு நடைபெற்றது. ஆரம்பத்தில் 3,935 காலிப் பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பரில் 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் அதிகமானோர் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் முன்னதாக தெரிவித்திருந்த நிலை யில், புதன்கிழமை (அக். 22) அன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.