tamilnadu

கச்சத்தீவை திரும்பப்பெற உடனே ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்க!

கச்சத்தீவை திரும்பப்பெற உடனே ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்க!

இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில், அதனை திரும்பப் பெற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.2)  முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மா னத்துக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆத ரவு தெரிவித்தன.  குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பு இல்லாததால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில், “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்க!

 இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர். அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் இந்திய  நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டு மென்று இப்பேரவை வலியுறுத்து கிறது.” என்றார். “தமிழ்நாட்டைச் சார்ந்த மீன வர்கள் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும்” முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, புரட்சி பாரதம், திமுக, அதன் தோழமைக் கட்சிகள் காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ, விசிக, மதிமுக, மமக, தவாக,கொமதேக மற்றும் பாமக உள்ளிட்ட அனைத் துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதையடுத்து, அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

எடப்பாடிக்கு முதலமைச்சர் கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து முதலமைச்சர் பேசுகையில், “இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன். நீங்களும்தான் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறீர்களே.. அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது தில்லி சென்று வந்தீர்களே.. அப்போது கச்சத் தீவு குறித்து சொல்லிவிட்டு வந்தீர்களா என நான் கேட்கிறேன் என்றார். இதையடுத்து பேசிய எடப்பாடி, இது தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என்பதால் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது”என்றார்.