காம்பியாவைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த சர்வாதிகாரி யாஹ்யா ஜம்மே பதவியிலிருந்து வெளியேறிய பிறகு, முதன்முறையாக ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுகிறது. 1994 ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் ஜம்மேயின் ஆட்சி காம்பியாவில் நடந்தது. தற்போது ஜனாதிபதி யாக இருக்கும் அடமா பர்ரோ உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
சர்வதேசக் காவல்துறையான “இன்டர்போல்” தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அகமது நாசர் அல் ரைசி பொறுப்பேற்றிருப்பதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றன. அப்படிப்பட்டவரை இன்டர்போல் தலைவராக நியமித்தால் நாடு விட்டு நாடு தாண்டி ஒளிந்து கொள்ளும் குற்றவாளிகளை எப்படிப் பிடிப்பார்கள் என்று பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியில் உறுப்பு நாடாக இருக்கும் நார்வே, ரஷ்யாவுக்கும் தனக்கும் இடையிலான எல்லையில் நேட்டோ படைகள் தேவையில்லை என்று கூறியிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நார்வே வெளி யுறவுத்துறை அமைச்சர் அன்னிகென் ஹட்பெல்ட், “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் போர் விமானங்கள் உள்ளிட்டவை நார்வே-ரஷ்ய எல்லையை விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.