போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிப்பு முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்குக!
சென்னை, ஜன. 30 - முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்குவதுடன், பணி யிடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 1996 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 உள்ளிட்ட 1996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு, அக்டோபர் 12 அன்று தேர்வு நடத்தியது. ஏறக்குறைய 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை எழுதினர். நவம்பர் 27 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகளை வெளியிட்டும் நியமன ஆணை இல்லை! ஆனால் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்றுவரை நேர்காணல் நடத்தி பணி நியமன ஆணை கள் வழங்கப்படவில்லை. மேலும் 1996 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படும் என்பது அரசு பள்ளி களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான எண்ணிக்கை யாகும். அரசுப் பள்ளிகளில் ஆயிரக் கணக்கான முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அத்துடன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 20 அரசு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதற்கு கூடுதலாக 200 ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களால் மாணவர்கள் கல்வி பயில்வது பாதிக்கப்படுகிறது. காலி இடங்களின் விபரத்தை வெளியிட வேண்டும் அதுமட்டுமல்லாமல் 2026-ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி யிட்டுள்ளது. அதில் எத்தனை காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடை பெறும் என்ற விபரம் இல்லை. கடந்த காலங்களில் தேர்வு அட்ட வணையில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை உத்தேசமாக குறிப்பிடப்படும். ஆனால் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் காலிப் பணி யிடங்கள் எண்ணிக்கை இல்லை. காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை இடம்பெறும் போது மாணவர்கள் அதற்கு ஏற்ற முறையில் தயாராவார்கள். ஆகையால் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை உயர்த்தி அறிவித்திட வேண்டும். தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடனடியாக பணி ஆணைகளை வழங்கிட வேண்டும். 2026ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அறிவித்திட வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும் இன்னும் சில நாட்களில் பள்ளிக் கல்விக்கான பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் என்பது ஏதோ காலிப்பணியிடம் சார்ந்தது மட்டுமல்ல ஒவ்வொரு மாணவரின் எதிர்கால வாழ்க்கை சார்ந்தது. எனவே, பள்ளிகளுக்கான முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்பிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளிவந்து இரண்டு மாதமாகியும் பணி நிய மன ஆணை வழங்காதது தேர்வு ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யாது. பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித் துறை, இந்த விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.