tamilnadu

இந்தியப் பொருளாதாரத்தைச் சரணடையச் செய்யும் வர்த்தக ஒப்பந்தம் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்

இந்தியப் பொருளாதாரத்தைச் சரணடையச் செய்யும் வர்த்தக ஒப்பந்தம் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்

ஒன்றிய பாஜக அரசு ஜனவரி 27 அன்று கையெழுத்திட்டுள்ள இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் (EU) தாராள வர்த்தக ஒப்பந்தமானது, இந்தியாவின் பொருளாதார நலன்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் மொத்தமாகச் சரணடையச் செய்யும் ஒரு நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையையும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் செயல் எனவும் சாடியுள்ளது.  தொழிற்துறையை முடக்கும் அதிரடி வரிக்குறைப்பு  இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 90 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியா அதிரடியாகக் குறைத்துள்ளது; அல்லது முற்றிலுமாக நீக்கியுள்ளது. குறிப்பாக, 110 சதவீதமாக இருந்த மோட்டார் வாகனங்களுக்கான வரி 40 சதவீதமாகவும், 150 சதவீதமாக இருந்த மதுபானங்களுக்கான வரி 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதுவரை 11 சதவீத வரி விதிக்கப்பட்ட மருந்துகள், 22 சதவீத வரி விதிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு, 50 சதவீத வரி விதிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் 33 சதவீத வரி விதிக்கப்பட்ட ஆட்டு இறைச்சி ஆகியவற்றின் மீதான வரிகள் பூஜ்ஜியமாக (0%) குறைக்கப்பட்டிருப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பேராபத்தாக முடியும் என அரசியல் தலைமைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.  வேலைவாய்ப்பு இழப்பும் பொருளாதாரப் பாதிப்பும்  இத்தகைய பெரிய அளவிலான வரிக்குறைப்பால் இந்தியாவின் வாகன உற்பத்தி, மருந்துத் துறை மற்றும் இயந்திரத் தளவாடத் தொழில்கள் சிதைக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தனது ஏற்றுமதியை இந்தியாவுக்கு 107.6 சதவீதம் வரை அதிகரிக்க இது வழிவகை செய்யும் என்றும் அரசியல் தலைமைக்குழு எச்சரித்துள்ளது. மலிவான இறக்குமதியால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் முடங்கி, மின்சார இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறைகளில் பெரும் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். ஆடம்பரக் கார்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை  குறைப்பு பணக்காரர்களுக்கு மட்டுமே பலன் தருமே தவிர, இதனால் ஏற்படும் சந்தைப் பாதிப்புகள் இந்திய விவசாயிகள் மற்றும் சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் என அறிக்கைசாடியுள்ளது.  இஸ்ரேல் உடனான கள்ளக்கூட்டு குறித்துக் கண்டனம்  மேலும், இந்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) துறைமுகத்தை ஒரு முக்கியப் போக்குவரத்துப் புள்ளியாகக் கொண்ட ‘இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை’ (IMEC) வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசா மீது இனப்படுகொலைத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை ஒரு நிறவெறி நாடாக அறிவித்துத் சர்வதேசத் தடைகளை விதிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், ஒன்றிய பாஜக அரசு இஸ்ரேலுடன் இத்தகைய பொருளாதார உறவை ஆழப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  நாடாளுமன்ற விவாதத்திற்கு வலியுறுத்தல்  ஒன்றிய அரசு தொடர்ந்து இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகப் பலிகொடுத்து வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தின் முழு உரையையும் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து, விரிவான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றும், மக்கள் விரோத ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற்று நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.