மதுரை, ஜன.04-
அனைத்துலக சிறந்த படைப்பாக “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், குரூப் -1 தேர்வில் “வேள்பாரி” நாவல் பற்றிய கேள்வி இடம் பெற்றிருந்தது குறித்தும் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “சமூகத்துக்கு பெரிதும் தேவை பதில்களை விட மிகச்சரியான கேள்விகளே" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
நேற்றைக்கு முன்தினம் மலேசியா – டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் விருது “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவலுக்கு அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் தமிழ்நாடு தேர்வாணையத்தின், குரூப் -1 தேர்வில் ”வேள்பாரி” நாவல் பற்றிய கேள்வி இடம் பெற்றிருந்தது.
இவை குறித்து எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்தவண்ணமுள்ளன.
இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் வாழ்நாள் சாதனைக்கான ”இயல் விருது” அறிவிக்கப்பட்டது ரொறொன்ரோவில் 2020 ஜுன் மாதம் 21ம் தேதி நடப்பதாக இருந்த விருது விழா பெருந்தொற்று காலமாதலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலமாதலால் விழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகளின் பயன் அது புதிய வாசகர்களின் முன்பு படைப்பினை கவனப்படுத்துகிறது. வாசிப்புக்கு அணுக்கமாக படைப்புகளை மீண்டும் மீண்டும் முன்கொண்டு செல்கிறது என்பது தான்.
வேள்பாரி வாசக மனதில் ஆழமான பாதிப்பினை வாழ்நாள் முழுக்க உருவாக்கும் படைப்பு. அதன் காரணமாகவே அது உடன் வளரவும், வளர்க்கவும் செய்யும். நம் பண்பாட்டு விழுமியங்களை ஆழ்மனம் எங்கும் நிரம்பச்செய்பவன் வேள்பாரி. உலகெங்கிலும் உள்ள வேள்பாரி வாசகர்கள் பாரியை எத்தனையோ வழிகளில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு வடிவம் தான் விருதுகளும்.
TNPSC நடத்தும் தேர்வுகளில் இதற்கு முன்பும் எனது படைப்புகள் பற்றிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துத்தேர்வு மட்டுமல்லாது நேர்முகத்தேர்விலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை கேட்கப்பட்ட கேள்வி சற்றே வியப்பினை ஏற்படுத்துவதாக இருந்தது.
“வேள்பாரி கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது” என்று நாவலில் துல்லியமான மையமுடிச்சினை கேள்வியாக மாற்றியிருப்பது வியப்புதான்.
வேள்பாரி மட்டுமல்ல, கீழடி, தந்தைப்பெரியார், அண்ணா, பரியேறும் பெருமாள் சமூக சீர்த்திருத்தம் என கேள்விகளின் வழியே இடம் பெற வேண்டிய அறிவினை சமூகத்துக்கு சுட்டி நிற்கும் செயல்பாடாக இத்தேர்வுத்தாள் இருக்கிறது.
அடுத்த வாரம் நாடாளுமன்ற நிலைக்குழு கூட இருக்கிறது. பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வரலாற்று தகவல்களை மறு உருவாக்கம் செய்யப்போவதாக அதன் நிகழ்ச்சி நிரலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சூழலில் ஒரு கேள்வித்தாள் கூட மனதுக்கு பெரும் ஆறுதலைத் தருகிறது.
சமூகத்துக்கு பெரிதும் தேவை பதில்களை விட மிகச்சரியான கேள்விகளே. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளாது.