மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து ஒன்றிய அரசு நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கடந்த ஆண்டு வரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தமிழ் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்று இருந்தன. இதனை கண்டித்தும், தமிழ் உடனடியாக இணைக்கப்பட வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில், நேரு யுவ கேந்திரா பேச்சுப் போட்டியில் மீண்டும் தமிழ் சேர்க்கப்பட்டு புதிய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கடந்த ஆண்டு வரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தமிழ் நீக்கப்பட்டதை கண்டித்து பதிவிட்டேன்.
இப்பொழுது தமிழ் சேர்க்கப்பட்டு புதிய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.