tamilnadu

உனக்கு இடமில்லை - உதயசங்கர்

சோலையூர் காட்டு ராஜா டிமுக்கோ திடீரென ஒரு உத்தரவு போட்டார். யார் அந்த டிமுக்கோ என்று தானே கேட்கிறீர்கள். வரிப்புலியார் தான். எப்படி அவர் ராஜாவானார் என்று தெரியுமா? அவர் இந்தக் காட்டைச் சேர்ந்தவரேயில்லை. தொலைதூரத்திலிருந்த மேட்டூர் காட்டிலிருந்து வந்தவர். அங்கே கடும் பஞ்சம். உணவு கிடைக்கவில்லை. அப்படியே பொடிநடையாகக் கிளம்பி வந்தார்.  இந்தச் சோலையூரைப் பார்த்ததும் அப்படியே  குடியேறி விட்டார். சோலையூரில் ,புள்ளி மான், கேழைமான், வரையாடு, மலை அணில்,  முயல், காட்டெருமை, மிளா, காட்டு மாடு,  கானாங்கோழி என்று ஏராளமான உணவு  கிடைத்தது. அது மட்டுமல்ல. எல்லாவிலங்கு களும் டிமுக்கோ வரிப்புலியாரைப் பார்த்து ஆச்சரியப்பட்டன.  அட அடடா என்ன ஒரு சிவப்பு. இந்த நிறம் யாருக்கு வரும். இவர் ஒரு அபூர்வப்பிறவி தான்.  தெய்வத்தின் அருள்பெற்றவர் தான் ” என்று  பாராட்டி வணங்கின. டிமுக்கோவுக்கு வசதி யாகப் போய்விட்டது. காலையில் குகையிலி ருந்து ஒரு கர்ச்சனை செய்யும்.  “ தெய்வத்துக்கு படையல் போட வேண்டும். ஒரு காட்டெருமைக் கன்றுக்குட்டி வேண்டும். கடவுள் சொர்க்கத்துக்குக் கூட்டிச்செல்வார்” என்று சொல்லும். காட்டெருமைக் கூட்டம் வருத்தத்துடன் ஒரு கன்றுக்குட்டியை அனுப்பி வைக்கும். அடுத்த நாள் மான்குட்டியைக் கேட்கும். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கைப் படையல் போட்டது டிமுக்கோ வரிப்புலி.  ஒருநாள் மதியூகி நரியார் கண்டுபிடித்து விட்டார். டிமுக்கோவின் குகையில் தெய்வமும் இல்லை. கடவுளும் இல்லை. டிமுக்கோ தின்ற விலங்குகளின் எலும்புகள் தான் குவிந்திருந்தன. மதியூகி நரியாரின் பேச்சை யாரும் நம்பவில்லை. டிமுக்கோ வரிப்புலி மாதிரி சிவப்பாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சில விலங்குகள் சொல்லின. டிமுக்கோவை எதிர்த்துக் கேள்வி கேட்டால் தெய்வம் தண்டித்து விடுமோ என்று சில விலங்குகள் பயந்தன.  கடைசியில் மதியூகி நரியாரே டிமுக்கோ வரிப்புலியிடம் கேட்டார்,

“ ஐயா.. நீங்கள் தினம் ஒருவரை சொர்க்கத்  துக்கு அனுப்புவதாகச் சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் குகையில் எந்தத் தெய்வ மும் இல்லையே. ஆனால் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. எங்களை ஏமாற்றுகிறீர்களா? “ என்று கேட்டது. உடனே புலி தெய்வ அருள் வந்ததைப் போல ஆட ஆரம்பித்தது. “ என்னையே சந்தேகப்படுறியா? இனி இந்தக் காட்டில் உனக்கு இடமில்லை.. என்னைப் போலச் சிவப்பாக இல்லாதவர்கள் இந்தக் காட்டிலிருந்து விலக்கி வைக்கிறேன்.. காட்டில் தனியான முகாமில் அடைத்து வைக்கி றேன்.. இதில் யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா? “ என்று கர்ச்சித்தது. மற்ற விலங்குகள் எதுவும் பேசவில்லை. பயந்து அமைதியாக இருந்தன. காட்டுக்கு வெளியே உருவாக்கிய சிறப்பு  முகாமில் நரியைப் போல கறுப்பு சாம்பல்  வண்ணமுள்ள விலங்குகள் அடைக்கப் பட்டன. மற்ற விலங்குகள் சிவப்புச் சாயத்தைப் பூசிக்கொண்டு திரிந்தன.  மதியூகி நரியாரின் நண்பனான முதலை யார் நரியாரைத் தேடி வந்தார். அவர் சிறப்பு முகா மில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டார். நேரே டிமுக்கோ வரிப்புலியாரிடம் போனார். “ நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆட்சி செய்ய முடியாது.. என்ன குற்றம் செய்தான் என் நண்பன்? “ என்று கேட்டது. உடனே டிமுக்கோ வரிப்புலி யார்,

“ என்னை எதிர்த்துக் கேல்வி கேட்கிறியா? இனி இந்தக் காட்டில் உடலில் வரிகள் இல்லாத விலங்குகள் இருக்கக்கூடாது.. அவர்கள் சிறப்பு  முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? “ என்று கர்ச்சித்தது. எந்த விலங்கும் பேச வில்லை. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. முதலையாரையும் தனி முகாமில் அடைத்தன.  மற்ற விலங்குகள் உடலில் வரிகளை வரைந்து  கொண்டு திரிந்தன.  இப்படி டிமுக்கோ வரிப்புலி தனக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் தனித்தனியான முகாம்களில் அடைத்து வைத்தது. மற்ற விலங்குகளுக்குக் கோபமும் வருத்தமும் இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமலிருந்தன. ஒரு நாள் ஒரு குட்டி மான் டிமுக்கோ வரிப்புலியின் குகைக்கு முன்னால் போய், “ராஜா குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒதுக்கக்கூடாது. இந்த காட்டில் எல்லாரும் வாழலாம்.. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது..” என்று கத்தியது. குகையிலிருந்து வெளியே வந்த டிமுக்கோ வரிப்புலியாருக்குத் தன்னை எதிர்த்து ஒரு குட்டி மான் கத்துவதைப் பார்த்த தும் கோபம் தலைக்கேறியது. ஒரு பாய்ச்சலில் குட்டி மானை அடித்தது. கீழே விழும்போது குட்டி மான், “ நீங்களே புலம் பெயர்ந்து இங்கே வந்தவர் தான் அழகும் நிறமும் இயற்கையின் தனித்துவம்.. அதில் ஏற்றதாழ்வு கற்பிக்கக் கூடாது.. உங்கள் தெய்வம் இதை உங்க ளுக்குச் சொல்லித் தரவில்லையா? “ என்று கத்தியது. அதைக் கேட்ட மற்ற விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. டிமுக்கோ வரிப்புலியாரைச் சுற்றி வளைத்தன. அந்தக் காட்டை விட்டே துரத்தி விட்டன.  கேள்வி கேட்ட குட்டி மானைக் கும்பிட்டு வணங்கின.