சோசலிசமே முழு சுதந்திரம் வழங்கும்! - செ.முத்துக்கண்ணன்
“புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன் றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல” என்பதே பகத்சிங்கின் கருத்து. அவரின் நோக்கம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்தியப் பெருமுதலாளிகளிடமிருந்தும், நிலப்பிரபுக்களிட மிருந்தும் உழைக்கும் மக்களின் விடுதலையை உறுதி செய்வது என்பதில் தெளிவாக இருந்தார். இதில் இருந்து சோசலிசம் மட்டுமே முழு சுதந்திரத்தை வழங்கும். பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் செயல்பாடு களால் அதிர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவரை ‘புரட்சிக்காரன்’ என்று முத்திரை குத்தியது. அதைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட பகத்சிங், ‘புரட்சிக்காரன் எனில் குண்டுகளும், துப்பாக்கிகளும் வைத்திருப்பவன் என்பது பொருள் அல்ல. புதிய சமூகத்தைப் படைக்க மக்களிடையே பணியாற்றுபவனும் புரட்சிக்காரனே’ என்று பதிலடி கொடுத்தார்.
இளம் வீரர்களின் எழுச்சிக் கனல்!
‘இந்திய வீரர்களை பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்பட வைத்தார்’ என்று கத்தார் கட்சியின் தலைவர் சர்தார் சிங் சராபா 16-11-1915 அன்று தூக்கிலி டப்படுகிறார். தூக்குமேடையிலிருந்த சராபா, “தேசத்தை சுதந்திர மண்ணாகப் பார்ப்பதே எனது குறிக்கோள். எம் தேசத்தின் சுதந்திரம் மட்டுமே என் விருப்பம். எனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை, எத்தனைமுறை அமைந்தாலும், அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்வேன்” என்றார். தூக்குக்கயிற்றை முத்தமிட்ட போது அவருக்கு வயது 20. இதை யறிந்து ‘வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும். மடிந்தால் இவர் போலவே நாட்டுக்காக மடிய வேண்டும்’ என்று, சிறுவனாக இருந்த போது சூளுரை எடுத்து, நாட்டுக்காக தனது 23-ஆவது வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டார் பகத்சிங். 13-ஏப்ரல் 1919 அன்று ஜாலியன் வாலாபாக் படு கொலையில் 12 வயது பகத்சிங், இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து, ‘இந்திய விடுதலையே எம் லட்சியம்’ என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். தேச விடுதலைக்காக எண்ணற்ற புரட்சியாளர்களை இந்தியா உருவாக்கியது. அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் ஈடிணையற்றது.
தேசநலனுக்கான போட்டி
இவர்களிடம் கடும் போட்டி நடந்தது - சுயநலத்திற் காக அல்ல, தேசநலனுக்காக உயிர்ப்பலி கொடுப்பதி லும், தியாகப் பரம்பரையை நிலைநிறுத்துவதிலும் அவர்களிடையே போட்டி நிலவியது. லாகூர் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் யதீந்திரநாத தாஸ் இறந்தார். அந்தமான் சிறையில் மகாவீர் சிங் நண்பர்களின் உயிர்களைக் காப்பாற்ற தன் உயிரை ஈந்தார். தனக்கு முன் பகத்சிங் இறக் கக்கூடாதென்பதே ராஜகுருவின் விருப்பமாக இருந்தது. “அப்படிப்பட்ட தோழர்களிடமும், அவர்களு டன் கழித்த காலத்தின்பாலும் யாருக்குத்தான் பற்றும், பாசமும் இருக்காது?” என சிவவர்மா கூறுகிறார்.
எங்களின் திசைவழி!
நவ ஜவான் பாரத் சபா, இந்துஸ்தான் சோசலிச குடியரசு படை மூலம் பகத்சிங் நடத்திய போராட்டங் கள் இந்திய இளைஞர்களை புதிய பாதைக்குள் திருப்பியது. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்குகள் தொடுக்கப்பட்டும், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அஞ்சாமல் போராடினார்கள். அவர்களின் அறிக்கையில், “புரட்சிகர மாற்றம் அத்தியாவசியம். சோசலிசத்தின் அடிப்படை யில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். புரட்சி என்பது, தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் உன்னத சமூக அமைப்பு நிறுவப் படுவதே” என்றனர்.
நீதிமன்றத்தில் பகத்சிங்கின் குரல்
ஒவ்வொரு நீதிமன்ற நடவடிக்கைகளையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தினார்கள். ஜூன் 6, 1929 அன்று நீதிமன்றத்தில் பகத்சிங், “உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பசியோடு இருக்கிறார். துணி நெய்பவரின் குழந்தைகள் துணியின்றி தவிக்கின்றனர். தொழிலாளிகளின் உழைப்பை முத லாளிகள் உறிஞ்சுகின்றனர். இச்சூழல் நீடிக்காது. இந்த சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள்” என்று முழங்கினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப்பெறப்பட்டது இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, “இது திருமணத்துக்குரிய நேர மல்ல; நாடு என்னை அழைக்கிறது” என்று தந்தைக்கு எழுதினார். “நீங்கள்லாம் பாட்டிக்காக கவலைப்படு கிறீர்கள், நான் 33 கோடி இந்திய மக்களின் தாயான பாரத மாதாவுக்காக கவலைப்படுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
பகத்சிங்கின் புரட்சிகர சிந்தனைகள்
புரட்சிகர இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்த பகத்சிங், மார்க்சியத்தையும் லெனின் சித்தாந்தத் தையும் ஆழமாக கற்றார். எல்லா மதங்களையும் சமமாக மதித்த அவர், மதவெறியை எதிர்த்தார். அவரது பெரும்பாலான எழுத்துக்கள் மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான சிந்தனையையே வெளிப் படுத்தின. ஆங்கிலேயரை விரட்டுவது மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் அடிப்படை சிக்கல்களை களைவ தும் அவசியம் என்று வலியுறுத்தினார். மூடநம்பிக் கைகளையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கடு மையாக எதிர்த்தார். ஆங்கிலேயர் காலத்திலிருந்த “வந்தே மாதரம்” போன்ற தேசிய கோஷங்களுக்கு பதிலாக, “இன் குலாப் ஜிந்தாபாத்!” (புரட்சி வாழ்க!) என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய விடுதலை இயக் கத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். இந்த முழக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடை யாளமாக மாறியது.
தியாகத்தின் உறைவிடமாய்
எளிய மனிதர்களுக்காகப் போராடிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், “இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்களோடு முடியப்போவது மில்லை” என்றனர். தூக்கு மேடைக்கு செல்லும்போது, “நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்” என்று முழங்கினார்கள். பகத்சிங் சிவவர்மாவிடம், “நீ நீண்ட பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கடமை என்னும் பெரும் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தாலும், இந்த நீண்ட தூரப்பயணத்திலே நீ களைத்துவிடமாட்டாய், துணிவை இழந்துவிட மாட்டாய், தோல்வியை ஒப்புக்கொண்டு உட்கார்ந்துவிட மாட்டாய் என நம்புகிறேன்” என்றார்.
வர்க்க அரசியலின் முன்னோடி
பகத்சிங்கும் அவரது தோழர்களும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்கள் உருவாக்கிய நவ ஜவான் பாரத் சபா, இந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி போன்ற அமைப்புகள் வர்க்க அரசியலின் முன்னோடிகளாக திகழ்ந்தன. இந்திய தேசிய காங்கிரஸின் மிதவாத அணுகுமுறையை விமர்சித்த அவர்கள், வர்க்க போராட்டத்தை முன்னிறுத்தினர். தொழிலாளர் - விவசாயி ஐக்கியத்தை வலியுறுத்தி, வர்க்க சுரண்ட லற்ற சமுதாய அமைப்பை நோக்கிய புரட்சிகர மாற்றத்தை முன்வைத்தனர். இந்திய அரசியலில் மூன்றாம் சக்தியாக தன்னை நிலைநிறுத்திய இடதுசாரி சிந்தனையின் விதைகளை விதைத்தவர்கள் இவர்களே. காந்தியின் அகிம்சைவழி போராட்டத்திற்கும், சுபாஷ் சந்திர போஸின் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில், வர்க்க அரசியல் அடிப்படையிலான மூன்றாம் பாதையை முன்வைத்தனர்.
இன்றைய சூழலில்
பகத்சிங், ஆசாத் போன்ற தோழர்கள் எந்த லட்சி யத்திற்காக தன் இன்னுயிரை ஈந்தார்களோ அந்த திசைவழியில் முதல் கட்டத்தை கடந்துள்ளோம். ஆனால் இன்னும் சுரண்டலும், வர்க்க பேதமும் நிலவும் நாட்டில் மக்களுக்கு விரோதமான அரசு உள்ளது. இதனை எதிர்த்த போராட்டத்தில் தோழர்களின் தியாகங்கள் உரமாகின்றன. ருஷ்யப் புரட்சியில் தொழிலாளி, விவசாய வர்க்கங் களின் கூட்டுறவில் உருவான செந்தொண்டர் அணியைப் போன்று, இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு பேரணிக்கு செந்தொண்டர்கள் அணிதிரள்கின்றனர். மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தில் தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு நடைபெறுகிறது.