பாட்டாளிகளின் தோழர் மகாகவி பாரதியென்றால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மிகச்சிறப்பான மூன்று சொற்களைத் தமிழில் தந்துள்ளார் பாரதி. Revolution, Communism, Comrade ஆகிய இந்த மூன்று ஆங்கிலச் சொற்களையும் முறையே ‘புரட்சி’ என்றும், ‘பொதுவுடைமை’ என்றும், ‘தோழர்’ என்றும் தமிழாக்கினார் பாரதி. லெனின் தலைமையில் 1917ஆம் ஆண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனுக்கு எதிராகப் பொங்கியெழுந்த ரஷ்யப் புரட்சியை, “ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்பதன் மூலம் ‘புரட்சி’ என்ற சொல்லையும், இந்தியாவில் “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை” என்பதன் மூலம் ‘பொதுவுடைமை’ என்ற சொல்லையும் தமிழுக்குத் தந்தவர் மகாகவி பாரதி. இந்த ஒப்பிலாத பொதுவுடைமை சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை என்றார். அதை ‘வாழ்க!’ என்றும் வாழ்த்தினார். ‘சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக’ என்பதன் மூலம் ‘தோழர்’ என்ற சொல்லையும் தமிழுக்குத் தந்தார் பாரதி. சோசலிசப் புரட்சியில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகளை ‘நமது தோழர்கள்’ என்று பாரதி அழைத்தது நமது கவனத்திற்குரியது. நாம் மகிழ்ந்து பெருமைப்படத்தக்கது. பாரதியார் தாம் எழுதிய ஆறிலொரு பங்கு என்ற சிறுகதையில், ‘இதனைப் படிக்கின்ற தாம் ஒரு கணம் ஸாக்சி போல நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பீராயின் மிகுந்த வியப்புண்டாகும்’ என்ற வரியிலும் ‘புரட்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். ஆக, ‘புரட்சி என்பது பாரதியார் படைத்த சொல் என்பதை அறியலாம். லெனினை ஸ்ரீமான் லெனின் என்று குறிப்பிடுவார். அந்த லெனினைக் கற்றறிந்தது போல் காரல் மார்க்ஸையும் கற்றறிந்தார். ‘ஐரோப்பிய சோசலிஸ்ட் மார்க்கத்தார்க்கு மூலகுரு காரல் மார்க்ஸ்’ என்றார். பாரதி இன்றிருந்தால் உலக சோசலிஸ்ட் மார்க்கத்தார்க்கு மூலகுரு காரல் மார்க்ஸ் என்று சொல்லியிருப்பார்! கவிமேதை பாரதி நம் தோழர்!