tamilnadu

img

வலதுசாரியா? இடதுசாரியா?

வலதுசாரியா? இடதுசாரியா? 

47 ஆயிரம் சாதிகள், 3 ஆயிரத்து 327 கட்சிகள், பல மதங்கள் இவை எல்லாவற்றையும் எடுத்த எடுப்பில் இரண்டாகப் பிரித்து விடலாம். ஒன்று,  இந்த சமூக அமைப்பு சரியாகத்தான் இருக்கிறது, எதையும் மாற்றத் தேவை யில்லை, சின்னச் சின்ன சீர்திருத்தம் செய்தால் போதும் என்று சொல்லக் கூடிய வலதுசாரி. மற்றொன்று, இந்த சமூகம் ஏற்றத்தாழ்வின் மீது கட்டப்பட்டி ருக்கிறது. அது பாலின அடிப்படை யில் ஆண்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தோர் என்று பாகுபாட்டுட னும், பொருளாதார ரீதியாக பாகு பாட்டுடனும், சாதி ரீதியான பாகுபாட்டு டனும் இருக்கிறது. மத ரீதியான குரோதங்களைக் கொண்டிருக்கிறது. இப்படியாக பாரபட்சம் மிகுந்த இந்த  சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும், சின்னச் சின்ன சீர்திருத்தம் எல்லாம் போதாது என்று சொல்லக்கூடிய இடதுசாரி.  புத்தர் முதல் இடதுசாரி  ‘உனக்கு நீயே ஒளியாய் இரு, வேறு எவனும் உனக்கு ஒளியைத் தரப்போவதில்லை’ என்று சொன்ன புத்தர் இந்தியாவின் முதல் இடது சாரி. மநுஸ்மிருதியும், சனாதன தர்மமும் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையிலே பிரித்த போது, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவர் நமக்கு இரண்டாவது இடதுசாரியாக வரலாற்றில் தெரிகின்றார்.  கடவுளைப் பற்றி நினைத்து நெஞ்சுருகப் பாடிக் கொண்டிருப்பது தான் இந்த பிறவியின் பயன் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, சக மனிதர்களைப் பார்த்து நீங்கள் கவலை கொள்ள வேண்டும் என்று, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் வாடினேன் நெஞ்சம்’ என்று  சொன்ன வள்ளலார் 200 ஆண்டு களுக்கு முன்னால் உதித்த ஒரு இட துசாரியாகத் தெரிகிறார்.  கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய போது, ‘உன் கோயிலை நீயே வைத்துக் கொள்,  நான் எனக்கான கோயிலை உரு வாக்குகிறேன்’ என்று சொன்ன ஐயா  வைகுண்டர், நம் காலத்தின் மிகப் பெரிய இடதுசாரி என்று நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னபோது, ‘பெண்களும் படிக்கத்தான் வேண்டும்’ என்று முதன் முதலாகத் தன்னுடைய சொந்த இடத்தில் பள்ளிக்கூடம் நடத்திய ஜோதிராவ் பூலேவும், சாவித்திரி பாய் பூலேவும் மிகப்பெரிய இடதுசாரி கள் என்று கொண்டாட வேண்டியிருக் கிறது.  தன்னுடைய மூத்திர சட்டியைச் சுமந்து கொண்டு கூடப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, சாதி ஒழிப்புப் பிரச்சா ரத்தை நடத்திய பெரியார் மிகப்பெரிய இடதுசாரி. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார்.  அரசியல் சுதந்திரம் நாம் அடைந்துவிட்டோம்; ஆனால் சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் எப்போது அடையப் போகிறோம்? அவற்றை அடையாத போது நிச்சயமாக முழு சுதந்திரத்தை அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடி யாது. “சோசலிசத்திற்கு மாற்று என்று கற்பனை கூடச் செய்ய முடியாது” என்று சொன்ன அம்பேத்கரை விடவும், பெரிய சோசலிசவாதியாக நாம் யாரை முன்னிறுத்தப் போகிறோம்? ஆக, அம்பேத்கரையும் இடதுசாரி இயக்கம் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது.  2025லும் பெண் கருக்கொலை  இந்த சமூகம் ஏன் மாற்றப்பட வேண்டும் என்று பேசுகிறபோது, அடிப்படையில் மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்று சொல்வோம். ஆனால், இங்கு 100 ஆண்களுக்கு 94 பெண்கள் தான் இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது. மீதி 6 பெண்கள் எங்கே போனார்கள்? என்று பார்த்தால் 2025 மார்ச் மாதம் பெரம்பலூர், பிப்ர வரி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழிக்கும் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. 2025 லும் கருக்கொலை நடந்து கொண்டிருக்கிறது.  பெண் குழந்தைகள் கருவி லேயே கரைக்கப்படுகிறார்கள். கருக் கொலை, சிசுக் கொலை, வீட்டில் குடும்ப வன்முறை, பாலியல் வன் முறைகள் அத்தனையும் நடக்கக்கூடிய இடமாக இருக்கிற காரணத்தினால், பெண்கள் பிறப்பிலேயே நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்தக் கொடுமை இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.  பெண் குழந்தையைச் சுமையாகப் பார்க்கும், இரண்டாம் தரமான, இழிவான பார்வை உள் ளது. பெண்ணை, ஆணை, மாற்றுப் பாலினத்தவரைச் சம பாலினமாகப் பார்க்கும் பார்வைதான் இடதுசாரிப் பார்வை. அதைத் தவிர பாலின சமத்துவத்திற்கு வேறு எந்தப் பார்வையும் தீர்வு அல்ல.  மாடு கூட ஒரு ஆண்டுக்கு 1064 மணி நேரம் தான் உழைக்கிறது. ஆண்கள் 1212 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால், பெண்கள் 3485 மணி நேரம் உழைக்கிறார்கள். அதாவது இரண்டு மாட்டுக்கு இணை யாக உழைக்கிறார்கள். பெண் களுக்குச் சம மதிப்பு என்கிற கோரிக்கையை, கருத்தாக்கத்தை அடிப்படையில் எழுப்பக்கூடிய ஒரே இயக்கம் இடதுசாரி இயக்கம் தான்.  சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில் தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசியதிலிருந்து...