tamilnadu

img

குயிலின் பாடல்

உதயசங்கர்

கருங்குயிலும் புள்ளிக்குயிலும் முட்டை இடுவதற்காகக் கூடுகளைத் தேடி அலைந்தன.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.
காகத்தின் கூட்டிலோ, தவிட்டுக்குருவியின் கூட்டிலோ தான் முட்டை இடும்.
குயில் முட்டை இட்டது காகத்துக்கும் தெரியாது.
தவிட்டுக்குருவிக்கும் தெரியாது.
ஆனால் இன்று புள்ளிக்குயில் முட்டை இட ஒரு கூடும் இல்லை.
காட்டில் இருந்த மரங்கள் எல்லாம் காய்ந்து விட்டன.
மழை இல்லை.
தண்ணீர் இல்லை.
மரங்கள் கிளைகளை உதிர்த்து விட்டன.
இலைகளை உதிர்த்து விட்டன.
பூக்களை உதிர்த்து விட்டன.
கிளைகள் இல்லாத
இலைகள் இல்லாத,
பூக்கள் இல்லாத,
மரங்களுக்கு எந்தப் பறவை வரும்?
எந்தப் பறவைகளும் வருவதில்லை.
ஏன் தெரியுமா?
கிளைகள் இருந்தால், தான் இலைகள் துளிர்க்கும்.
இலைகள் துளிர்த்தால் தான் பூக்கள் பூக்கும்.
பூக்கள் பூத்தால் தான் பூச்சிகள் வரும்.
புழுக்கள் வரும்.
பூச்சிகள், புழுக்கள் இருக்கும் மரத்தில் தான் 
பறவைகள் கூடுகளைக் கட்டுவார்கள்.
முட்டைகள் இடுவார்கள்.
முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரும்.
ஆனால் இங்கே
மரங்கள் காய்ந்து போனதால் எதுவும் இல்லை.
புள்ளிக்குயிலும், கருங்குயிலும் அந்தக் காடு முழுவதும் பறந்து திரிந்தன.
ஒவ்வொரு மரத்திலும் உட்கார்ந்து பாடின.
குக்க்கூஊஊஊ குக்குக்குக்கூஊஊ
குக்க்கூஊஊஊ குக்குக்கூஊஊ
குயில்கள் உயிரை உருக்கிப் பாடின.
அந்தப் பாடல் காடு முழுவதும் கேட்டது.
ஒவ்வொரு மரமும் அந்தப் பாடலைக் கேட்டது.
பாடலைக் கேட்டுக் கண்ணீர் வடித்தன.
தூரத்துக்காட்டில் இருந்த பறவைகள் கேட்டன.
கண்ணீர் வடித்தன.
விலங்குகள் கேட்டன.
கண்ணீர் வடித்தன.
பூச்சிகள் கேட்டன.
கண்ணீர் வடித்தன.
புழுக்கள் கேட்டன.
கண்ணீர் வடித்தன.
குயில்கள் இரவிலும் பாடின.
பகலிலும் பாடின.
குயிலின் பாடலை இயற்கையும் கேட்டது.
அந்தப் பாடலில் இருந்த 
இயற்கை மீதான அன்பு
உயிர்களின் மீதான அன்பு
மரங்களின் மீதான அன்பு
வாழ்க்கை மீதான அன்பு
இயற்கையின் மனதையும் உருக்கியது.
இயற்கையும் கண்ணீர் வடித்தது.
மழை பொழிந்தது.
மரங்களில் இலைகள் துளிர்த்தன.
பறவைகள் வந்தன.
விலங்குகள் வந்தன.
பூச்சிகள் வந்தன.
புழுக்கள் வந்தன.
மரங்களில் பறவைகள் கூடுகள் கட்டின.
புள்ளிக்குயில்கள் அந்தக் கூடுகளில் முட்டையிட்டன.
எங்கும் மகிழ்ச்சி பொங்கியது. 
இப்போதும் குயில்கள் பாடின.
ஆனந்தப்பாடல்!
குகுகுகுக்க்கூஊ… குகுகுக்க்கூஊ …