புதிர் விளையாட்டுகள் மனதிற்கு உற்சாகம் தருகின்றன. அத்துடன் அறிவைக் கூர் தீட்டிக்கொள்ளவும் உதவுகின்றன. குழந்தைகளின் உள்ளங்களில் விடைகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வ முனைப்பைத் தூண்டுகின்றன. பெரியவர்களுக்கும் புத்துணர்வோடு இருக்க உதவுகின்றன. வாரம் ஒரு புதிரோடு சந்திப்போம். விடையை முதலிலேயே பார்ப்பதில்லை என்ற உறுதியோடு விளையாட்டுக்கு வாருங்கள்.
அவள் பெயர் என்ன?
பொன்னியின் பெற்றோருக்கு மொத்தம் ஐந்து மகள்கள். ஐந்து பேருமே செல்லமாக, சுதந்திரமாக வளர்ந்தார்கள். ஒரு நாள் வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் மகள்களின் திறமைகளைப் பற்றியும் குறும்புகளைப் பற்றியும் சொன்னார் அம்மா. அவர்களின் பெயர்களைக் கேட்டார் விருந்தினர்..“மூத்தவ பேரு லீலா. ரெண்டாவது மக பேரு நீலா. மூணாவது மகளோட பெயர் மல்லிகா. நாலாவது பொண்ணுக்கு செவ்வந்தின்னு பேரு வைச்சிருக்கோம். கடைக்குட்டிக்கு…” என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது குளியலறையிலிருந்து “அம்மா, துண்டை எடுத்துக்க மறந்துட்டேன். கொண்டுட்டு வா,” என்று குரல் வந்தது. “இவளுக்கு எப்பவும் இதே வேலையாப் போச்சு,” என்று செல்லக் கோபத்துடன் எழுந்து போனார் அம்மா. ஐந்தாவது மகளின் பெயரைச் சொல்லாமல் போய்விட்டாரே என்று விருந்தினர் நினைத்தார். நீங்கள் சொல்லுங்கள், ஐந்தாவது பெண்ணின் பெயர் என்னவாக இருக்கும்?