மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
பெரம்பலூர், ஜூலை 28- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 383 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.