பாராமெடிக்கல் மாணவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதி செய்து தருக! இந்திய மாணவர் சங்கம் ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி, ஆக. 4- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் ஜி.கே.மோகன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் பயிலக்கூடிய மாணவர்கள், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த மருத்துவமனையில் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை பயன்படுத்தாமல், பாராமெடிக்கல் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரவு நேர பயிற்சி வழங்குவதால், அவர்களால் முறையாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி பெறும் மருத்துவமனையிலேயே வகுப்பறைகள் ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு அருந்தும் இடம் மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பயிற்சி பெற மாணவர்களுக்கு கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். முன்னதாக, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் ஜி.கே. மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் மெடிக்கல் அன்பு பேசினார். இதில் ஏராளமான பாராமெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.