உயரம் வளர்ச்சி தடைப்பட்டோருக்கான உலக தினம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
மயிலாடுதுறை, அக். 27- உயரம் வளர்ச்சி தடைபட்டோருக்கான உலக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் லெட்சுமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் சிவகாமி, பாலசுந்தரம், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.புருஷோத்தமன், மாவட்ட தலைவர் டி. கணேசன், மாவட்ட துணைத் தலைவர் யூ. ராஜேந்திரன், டி. கோவிந்தசாமி, எம். சொக்கலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். உயர வளர்ச்சி தடைபட்டோரை, கடும் ஊனமுற்றோராக அறிவித்து, அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை வழங்கிட வேண்டும். உயரம் வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டிக் கொடுத்திட வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வழங்கினர்.
