திருவாரூர் நகராட்சி ஒப்பந்த மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர் நகராட்சி ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் ராஜேந்திரனை தொலைபேசியில் ஒருமையில் பேசி மிரட்டிய நகராட்சி ஒப்பந்த மேலாளர் கார்த்தியை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி அலுவலகம் முன்பாக நகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கம்(சிஐடியு) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள்- என்எம்ஆர் ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நகராட்சி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ராஜேஷ், பாக்கியராஜ், தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்ட பொருளாளர் கே.கஜேந்திரன் மற்றும் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தகாரர் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், ஏற்கனவே ஒத்துக்கொண்ட அடிப்படையில் அரியர் ரூ.1500-ஐ உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.