tamilnadu

img

காமராஜர் பல்கலை.யில் பிள்ளையார் சிலை மதச்சார்பு நடவடிக்கையில் துணைவேந்தர்

மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திடீரென விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.மதுரை பல்கலைக்கழகம் 1966-ஆம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.1978-ஆம் ஆண்டு மறைந்த தமிழகமுதல்வர் காமராஜர் நினைவாக இப்பல்கலை. மதுரை காமராஜர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.அன்று முதல் இன்று வரை பல்கலைக் கழகத்தில் மதச்சார்பின்மை, மாணவர் ஒற்றுமை, பாகுபாடற்ற கல்விவழங்கப்பட்டுவருகிறது. பல்கலை.யில் கம்பீரமாக காமராஜர் சிலை இருக்கி
றது.இந்த நிலையில் தற்போது துணைவேந்தராக உள்ள மு.கிருஷ்ணன் புதிதாக வெள்ளிக்கிழமை விநாயகர் சிலையை நிறுவி பல்கலைக்கழகத்திற்கு மதச்சாயம் பூசியுள்ளார். சனிக்கிழமை பிள்ளையாருக்கு விஷேச பூஜைகள் செய்யவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கேட்டதற்கு, “ இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டும். இந்து என்றெல்லாம் கூறிவிடாதீர்கள். பல்கலைக்கழகம் அருகே அடிக்கடி சாலைவிபத்துகள் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக வாஸ்து அடிப்படையில் இங்குள்ள ஊழியர்கள் சிலர் பிள்ளையாரைவெள்ளிக்கிழமை காலை நிறுவியுள் ளனர். பிரச்சனை ஏற்படுமென்றால் அகற்றி விடுகிறேன்” என்று விளக்கமளித்தார்.இதற்கிடையில் உளவுத்துறை காவல் பிரிவைச் சேர்ந்தவர்கள், நாக
மலைப்புதுக்கோட்டை ஆய்வாளர் இராம.நாராயணன் ஆகியோர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் துணைவேந்தரிடம் தமிழக அரசின் நிலைபாடு, நீதிமன்றஉத்தரவு பற்றிக் கூறி மாணவர் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிள்ளையார் சிலை நிறுவிய விவகாரத்தில் தமிழக டிஜிபி அலுவலகமும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத் துள்ளது.இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர், “சிலையை அப்புறப்படுத்தாவிட்டால், இந்திய மாணவர் சங்கம் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அவர்கள் வந்தால் மீடியாக்காரர்கள் வந்துவிடுவார்கள். அதுதேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதையும் நாசூக்காக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.இதற்கிடையில், நாகமலைப்புதுக் கோட்டை காவல்ஆய்வாளரை தொடர்பு கொண்டு இந்திய மாணவர் சங்கத்தின்மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் பேசினார். அப்போது, அவரிடம் “வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணிக்குள் சிலையை அப்புறப்படுத்திவிடுவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார். அப்படி சிலையை அப்புறப்படுத்தாவிட்டால், ஐந்து மணிக்கு புகாரளியுங்கள் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம், மாணவர் ஒற்றுமை ஆகியவற்றை போதிக்க வேண்டிய துணைவேந்தர் “பிள்ளையாரை” வைத்து பிரச்சனையை கிளப்புவது பல்கலைக்கழகத் திற்கு அழகல்ல.

இரண்டடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டு அதன்மேல் பிள்ளையார் வைக்கப்பட்டுள்ளார். பிள்ளையார்சிலையை மட்டுமல்ல, சுற்றுச்சுவரையும் முழுமையாக அப்புறப்படுத்தவேண்டும். இல்லையெனில் பிள்ளையார் சதுர்த்தி முடிந்தபிறகு மீண்டும் அங்கு பிள்ளையார் அமர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.சிலையையும், பீடத்தையும் அகற்றாவிட்டால் இந்திய மாணவர் சங்கத்தினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால் அங்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

‘பதற்றத்தை உருவாக்கலாமா?’
கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் இதற்கு முன்பு எப்போதும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் கொண்டாடப்படாத விநாயகர் சதுர்த்தி நிகழ்வை நடத்த பல்கலை., நிர்வாகம் தயாராகி வருவது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயலாகும்.உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் பொது வெளியில் விழா கொண்டாடக்கூடாது என்ற உத்தரவை வெளியிட்டும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசின் அறிவுறுத்தலையும் மீறி இப்படி செய்வது உயர்கல்வி மையத்திற்கான பண்பல்ல என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிருந்தா, வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நமது சிறப்பு நிருபர்