tamilnadu

img

திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஒற்றுமைப் பிரச்சாரத்தைத் தடுத்த காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஒற்றுமைப் பிரச்சாரத்தைத் தடுத்த காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தின் மதநல்லிணக்கப் பெருமைகளைப் பாதுகாப்போம்! கொடிய விஷம் கக்கும் மதவாத பிரச்சாரத்தை ஒதுக்கி வைப்போம்!” என மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி துண்டறிக்கை வழங்கியவர்களை, காவல்துறையினர் தடுத்து அராஜகத்தை அரங்கேற்றினர்.

பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத அமைப்பினர், திருப்பரங்குன்றத்தில் மதவெறியைக் கிளப்பி கலவர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ‘மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி  இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் மதுரை புறநகர் - மாநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று காலை மக்கள் துண்டறிக்கை வழங்கி, மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா. ரவி, திருப்பரங்குன்றம் தாலுகா குழு செயலாளர் எம். ஜெயக்குமார், வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் வெ. கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் பா.தமிழரசன், மாவட்ட நிர்வாகிகள் திருதரன், பாலா, மாநகர் மாவட்டத் தலைவர் பாவல் சிந்தன், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் வேல்தேவா, கௌதம் பாரதி, மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர். சசிகலா, புறநகர் மாவட்டத் தலைவர்- மாமன்ற உறுப்பினர் என். விஜயா, மாவட்டச் செயலாளர் க. பிரேமலதா, மாநகர் மாவட்டத் தலைவர் லதா, மாவட்டச் செயலாளர்- மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் , இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் துணைத்தலைவர் தீலன், தமுஎகச மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் வெண்புறா, மாவட்டச் செயலாளர் லெனின், மாநகர் மாவட்டத் தலைவர் இளங்கோ உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் தலைமையிலான காவல்துறையினர், பிரச்சாரத்தைத் தடுக்க முயன்றனர்.  “

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் துண்டறிக்கையை விநியோகம் செய்வதில் என்ன தவறு?” என்று அமைப்பின் நிர்வாகிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ‘துண்டறிக்கை கொடுக்க அனுமதியில்லை’ என்று கூறி, துண்டறிக்கைகளைப் பறித்து அராஜகமாக நடந்து கொண்டனர். அப்போது, அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் - தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் உதவி ஆணையாளர் சுகப்பிரியா, சிபிஎம் தலைவர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்காலிகமாக மக்கள் சந்திப்பு இயக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.