மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.32.50 லட்சம் மதிப்புள்ள நிமிடத்திற்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டது. அதை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஞாயிறன்று துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவடட் வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி, அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் ரத்னவேலு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.ஜெயக்கண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், “மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு தற்போது சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை நாமே உற்பத்தி செய்துகொள்கிறோம். அரசு இராஜாஜி விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ரூ.70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஞாயிறன்று நிமிடத்திற்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சசைக்காக பெறப்படும் கட்டணங்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டது. இக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 12 நபர்களிடமிருந்து தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக வசூலித்த கட்டணத்தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றனர்.