tamilnadu

தமிழக மக்கள் ஒன்றிய அரசு மீது வெறுப்படைந்துள்ளனர் இபிஎஸ் அறிக்கை

தமிழ்நாட்டிற்கான பிஎம்ஸ்ரீ நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய கல்வி அமைச்சர் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், ஒன்றிய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, பிற மாநிலங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். எனவே, தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்றது. இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. ஒன்றிய அரசு இதை உணர்ந்து, மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கையை, தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒன்றிய அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, மாநிலத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது, மாணவர்கள்-ஆசிரியர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் ஒன்றிய அரசு இழைக்கும் துரோகமாகும். இதனால், ஒன்றிய அரசின் மீது மக்கள் வெறுப்பும் அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.