நாடுமில்லை வீடுமில்லை
உண்ண உணவுமில்லை
படுக்க படுக்கையுமில்லை
பனியில் போர்த்திட துணியுமில்லை
பசியும் பட்டினியுமான பொழுது
பஞ்சத்தின் உச்சத்தில் வாழ்வு
கடன் கொடுத்தவன் வீட்டில் புகுந்தான்
கட்டில் தொட்டில் துணிகளை வாரினான்
குளிர்மிகு நகரில் உறங்க வழியில்லை
குழந்தைகளின் நடுக்கம் தீரவில்லை
இலட்சியப் பாதையில் உறங்கினாய்
அலட்சியமாக்கினாய் அவதிகளை
பிறந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை
இறந்த குழந்தைக்கு சவப்பெட்டி இல்லை
குழந்தைகளை பலிகொடுக்க நேர்ந்தது
கொஞ்சுமந்த பிஞ்சுகளை பிரிய நேர்ந்தது
துன்பங்கள் ஆயிரமாய் வந்தன
துயரங்கள் போகாமல் தாக்கின
உன் கண்ணில் நீரல்ல குருதிதான்
உன் உடலில் குருதியும் குறைந்ததே
தாங்கினாயே இமய பாரத்தை
தாய் குலத்தின் மாணிக்கமாய்
நீயின்றி கார்ல் மார்க்ஸ் இல்லை
நினைவிலும் கனவிலும் துணையாய்
மூலதனம் எழுத மூலதனமானாய்
முக்கிய பங்கும் வகித்தாய்
சிந்தனைக்கு தூண்டு கோலனாய்
செம்பருதி போல் ஒளி தந்தாய்
எழுதுகோல் ஏந்த உதவினாய்
எழுதியும் திருத்தியும் கொடுத்தாய்
அவரெழுத்தை நீயே அறிந்தாய்
அவருள்ளத்தையும் நீயே புரிந்தாய்
பசி மறந்திட பாசம் கொடுத்தாய்
புசித்திடவே புன்னகை கொடுத்தாய்
அன்றாடம் வந்திடும் தோழருக்கு
அன்புடன் அபசரித்து தொண்டு செய்தாய்
மானிட சமூகத்தை மாற்றிடவே,
மாளாத சுமை தாங்கி வாழ்ந்தாய்
அடிக்கல்லின் சுமையை யாரறிவார்?
அன்றாட போராட்டத்தை யார் புரிவார்?
வர்க்கப் போராட்டம் வளர்த்திட,
வாழ்க்கைப் போராட்டத்தில் வாழ்ந்தாய்
கோலாகலமாய் வளர்ந்திட பொதுவுடமை,
குன்றி குறுகி அழிந்திட முதலாளித்துவம்,
அகிலத்தையே புரட்டும் புரட்சியை,
அணையா தீபமாக்க எரி பொருளானாய்
கோடானகோடி ஆண்டுகள் கழித்தும்
கொண்டாடுமே அகிலம் உம்மை.
எண்ணில்லா வான்மீன்கள் போன்றே,
எண்ணற்ற புகழ்மாலைகள் உமக்கே
என்றென்றும் வாழ்வாய் அண்டத்தின்
என்றுமே அணையா தியாகச் சுடராய்.