கடும் துயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சென்னையில் 10 நாட்களாக நீடிக்கும் வாழ்வாதார இயக்க ஊழியர் போராட்டம்
சென்னை, பிப். 11 - 10 நாட்களாக தொடரும் வாழ்வாதார இயக்க ஊழியர்களின் போராட்டத்தில் துணை முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக, நகர வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர் நலச்சங்கத்தினர் 10 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் அருகில் கூடுவதும், காவல்துறை கைது செய்வதும் தொடர்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து சென்னையில், காத்திருப்பது மிகவும் துயரம் மிகுந்ததாக உள்ளது. அரசு அதிகாரிகள் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அரசாணைப்படி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவில்லை. இந்தப் போராட்டத்தையடுத்து விடுப்பு வழங்க சம்மதித்து உள்ளனர். இந்தத் துறைக்கு பொறுப்பு என்ற முறையில், கடந்த 8 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியத்தை நேரடியாக வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை தடை செய்யப்பட்டு மீண்டும் பணி வழங்குவதற்கு மாறாக, 10 முதல் 15 ஆண்டுகள் பணி செய்து வருவதைக் கணக்கில் கொண்டு பணி உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.