மதுரை:
டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலிபோராட்டம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த லெனின் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்காக அரசு திட்டமிட்டுவருகிறது. இதனால் விவசாயம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது.எனவே தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூன் 12 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவல்துறை தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
எனவே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்ககாவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.