கேரளத்தில் குறைந்த விலையில் மருந்துகள்
பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கேரள அரசு நிறுவனமான மாநில மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் லிமிடெட் (கேஎஸ்டிபி) குறைந்த விலையில் தரமான மருந்துகளை கிடைக்கச் செய்வதற்காக சில்லரை விற்பனைச் சங்கிலியைத் தொடங்குகிறது. இதுகுறித்து நிறுவன தலைவர் சிபி சந்திரபாபு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கையில், ‘மெடி மார்ட்’ என்ற பெயரில் முதல் சில்லரை விற்பனை நிலையம் ஆலப்புழாவின் கலவூரில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் திறக்கப்படும். ஓராண்டு நீடிக்கும் 50ஆவது ஆண்டு விழா மற்றும் மெடி மார்ட்டை ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைக்கிறார். கலவூரில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படும் இந்த விற்பனை மையம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.