* 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள்!
* தமிழக வரலாற்றில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்த நாள்.
* ஜூனியர் ஜாலியன் வாலாபாக் படு கொலை என பத்திரிகைகள் கண்டனம்.
ஆம்! அன்றைய தினம் தான் நெல்லை மாநகரில் போராடும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக, இடதுசாரி இயக்கங் களைச் சார்ந்தவர்களும் ஊர்வலமாக அணி வகுத்துச் சென்றனர். அவ்வாறு சென்றவர் களில் 17 பேர் காவல்துறையினரால் கொடூர மாக அடித்தும், தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித் தும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் இரண்டு வயது குழந்தை. மேற்கண்ட ஊர்வலம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்திருந்த கொக்கிரக்குளம் சாலையின் வழியாக ஊர்வல மாக வந்து கொண்டிருந்த போதுதான் காவல் துறையின் அடக்குமுறைகள் கோரத்தாண்டவ மாயின. தலைமையேற்று வந்த தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவது தான் ஊர்வலத்தின் நோக்கமாக இருந் துள்ளபோது இத்தகைய அடக்குமுறைகள் தேவை தானா?. ஊர்வலமாக வந்தவர்களைக் காவல்துறை யினர் வழிமறித்து தடியடி நடத்தினர். அதற்கு முன்னதாக கண்ணீர்ப் புகை பிரயோகமும், வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டு துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. ஊர்வலம் வந்த சாலையின் இடதுபுறம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்திருந்தது. ஊர் வலத்திற்கு முன்பும், பின்பும் பல்லாயிரக் கணக்கான காவல்துறையினர் அணிவகுத்து வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல கத்திற்கு உள்ளும், வெளியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வலத் தின் வலதுபுறம் தாமிரபரணி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. தடியடி காரணமாக ஊர்வலத்தில் வந்த வர்கள் சிதறினர். அவர்கள் தப்பியோடுவதற்கு வலதுபுறம் அமைந்திருந்த தாமிரபரணி ஆற்றை தவிர வேறு வழியில்லை. எனவே, சிதறி ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கினர். தொடர்ந்து விரட்டிய காவல்துறை யினரும் ஆற்றுக்குள் இறங்கி தடியடியை தொடர்ந்து நடத்தினர்.
அதுமட்டுமல்ல; ஆற்றுக்குள் இறங்கி திணறிக் கொண்டிருந்த பலரையும் நீருக்குள் அமுக்கி மூச்சுத் திணற வைத்தனர். இவ்வாறு ஆற்றுக்குள் மூழ்கடித்த திலும், தடியடி நடத்தியதிலும் தான் 17 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் பலர் ஏற்கனவே கல்லெறியால் காயமும்பட்டிருந் தனர். இந்த கல்லெறி நடத்தியது வேறுயாரு மல்ல சாட்சாத் காவல்துறையினரே தான். காவல்துறை தாக்குதலில் மரணமடைந்த 17 பேரின் சடலங்கள் இரண்டு, மூன்று நாட் களாக ஆற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன. மேலும் ஒருவரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் இன்று வரை தெரியவில்லை. இறந்து போன 17 பேரில் 11 பேர் தலித் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காவல்துறை தாக்குதலில் 2 வயது குழந்தை விக்னேசும் கொல்லப்பட்டான் என்பது அதிர்ச்சி யான சம்பவம். அவன் மட்டுமல்ல அவனைக் காப்பாற்ற போராடிய அவன் தாய் ரத்தின மேரியும் தாக்குதலில் கொல்லப்பட்டார். மற்றொரு பெண்மணி ஜோஸ்பின் என்பவரும் காவல்துறையின் தாக்குதலால் மரணமடைந் துள்ளார். தமிழக வரலாற்றில் ஆற்றில் மூழ்க டித்தும், அடித்தும் இத்தனை பேர் கொல்லப் பட்ட சம்பவம் இதற்கு முன்பு நடந்ததேயில்லை. மேற்கண்ட படுகொலை மட்டுமல்ல; ஊர்வலமாக வந்தவர்கள் பலரும் கல்லெறி தாக்குதலால் படுகாயமடைந்தனர். கல்லெறி தாக்குதலை காவல்துறையினர் அரங்கேற்றி யது வெட்கக்கேடான நிகழ்வாகும். இது குறித்து அப்போதைய தமாகா சட்டமன்ற குழு தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியதாவது; “காவல்துறையினரே கல்லெறி சம்பவத்தில் ஈடுபடுவதை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன்” என்றார். மேலும் “கற்கள் இருந்த திறந்த ஜீப்பில் தான் தலைவர்களை காவல் துறை ஏற்றி கொண்டது” என்றார். காவல்துறையின் கல்லெறி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய நெல்லை மாவட்ட குழு செயலாளர் வீ. பழனி. இவரது தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இவரை ஏற்கனவே கல்லெறி யால் காயமடைந்த ஒரு இளைஞரும், தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 30 மணி நேரம் கழித்துதான் பழனிக்கு நினைவு திரும்பியது. அந்தளவுக்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு ஒருவாறு அவர் உயிர் பிழைத்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பழனியை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், அப்போதைய தமாகா எம்.எல்.ஏ., மு.அப்பாவு-வும் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். சம்பவம் தெரிந்தவுடன் சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் உடனடியாக நெல்லை விரைந்தார். மருத்துவமனையில் காயமடைந்த அனைவரையும் சந்தித்ததோடு ஊர்வலத்தில் பங்கேற்ற பல தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து விபரங்களை தெரிந்து கொண்டார். அன்றைய தினம் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இவருடன் தான் ஒரு வாகனத்தில் தலைமை தாங்கியவர்களில் ஒருவராக வீ.பழனியும் இருந்தார். இவர்களு டன் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சோ.பாலகிருஷ்ணன் (குழு தலைவர்), மு.அப்பாவு (ராதாபுரம் தொகுதி), ஈஸ்வரன் (வாசுதேவநல்லூர் தொகுதி), ஜே.எம். ஆருண் (வில்லிவாக்கம் தொகுதி), வேல்துரை (சேரன்மகாதேவி தொகுதி) ஆகியோரும் இதுபோக சிபிஐ தலைவர் வேணு மற்றும் முஸ்லீம் முன்னேற்ற கழகம்,ஐக்கிய ஜமாத் தலைவர்களும் சென்றனர். மிகக் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்ட 23.7.1999ந் தேதிய இப்போராட்டத்தின் பிரதான நோக்கம் தான் என்ன?. மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள் 2000 பேர் 20.8.1998 முதல் - அதாவது மேற்கண்ட ஊர்வலத்திற்கு ஓராண்டு முன்பிருந்தே வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் பிரதான கோரிக்கைகளாக,
1. உடனடியாக நியாயமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
2. தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க கோரிக்கை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
3. 8.7.1999 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது காவல்துறையினர் அடாவடித்தனமாக 652 தொழிலாளர்களை கைது செய்து திருச்சி சிறைச் சாலையில் அடைத்துள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் அடைத்தால் இதர தொழிலாளர்களும், உறவினர்களும் எளிதில் தொடர்பு கொள்வார்கள் என்பதால் நெடுந்தொலைவில் திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
4. தொழிலாளர்களில் 80 சதவிகிதம் பேர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இத்தொழிலாளர்களின் வேலை நேரத்தைஒழுங்குபடுத்த வேண்டும். தோட்டங்களில் அறுவடை செய்யும் தேயிலையை ஒப்படைக்க அவர்கள் 4 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நடந்து செல்லும் இந்நேரத்தை நிர்வாகம் வேலை நேரமாக கணக்கில் எடுப்பதில்லை. இந்நேரத்தையும் வேலைநேரமாக கணக்கிட வேண்டும்.
தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை பிரதானமாக புதிய தமிழகம் தலைமையிலான தொழிற்சங்கம் தலைமையேற்று நடத்தியது. இச்சங்கம் உருவாகுவதற்கு முன்னால் பிரதானமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக ஐ.என்.டி.யு.சி., உட்பட நான்கு தொழிற்சங்கங்கள் இருந்தன. பிற்காலத்தில் இச்சங்கங்களின் செல்வாக்கு குறைந்து டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான தொழிற்சங்கம் பலம்பெற்றது. சிஐடியு சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. தொழிலாளர்களின் ஊதியத்தி லிருந்து சந்தா பெறுவதை கொள்கை அளவில் சிஐடியு ஏற்றுக்கொள்ள வில்லை. ஆயினும், தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சங்கத்திற்கு நல்ல மரியாதை இருந்தது. அங்கு நடைபெற்ற ஒர்க்ஸ் கமிட்டி தேர்தலில் சிஐடியு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக சிஐடியு மாவட்ட தலைவர் எம்.இராஜாங் கம் தெரிவிக்கிறார். இந்த வேலைநிறுத்தம் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இச்சங்கத்தின் பொறுப்பாளர் பி. தியாகராஜன் கலந்து கொண்டிருக்கிறார். எனினும், நிர்வாகம் நியாயமான நிலைபாட்டை மேற் கொள்ளாததால்தான் வேலை நிறுத்தம் முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருந்தது. இப்பின்னணியில் மாவட்ட அரசு நிர்வாகத்தை தலையிட வைத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தவே 23.7.1999 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றது. மாவட்ட நிர்வாகம் ஊர்வலத்தில் வந்த தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந் தால் தடியடி - படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் கடும் அடக்குமுறைகளை ஏவியது. 17 பேர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு நிலைமை சென்றது. மேலும் ஏராளமானோர் தடியடி, கல்லெறி சம்பவங்களால் காயமடைந்துள்ளனர்.
காவல்துறை நடத்திய படுகொலை தாக்குதலை விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்ட விசாரணை கமிசன் அமைக்குமாறு அப்போதைய சிபிஐ (எம்) மாநில செயலாளர் தோழர் என். சங்கரய்யா, சிபிஐ மாநில செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் அன்றைய திமுக அரசை வலியுறுத்தினர். டாக்டர் கிருஷ்ணசாமி உச்சநீதி மன்ற நீதிபதியைக் கொண்ட விசாரணைக் கமிசனை அமைக்க கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக திமுக அரசு கார்த்திகேயன் என்ற ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை விசாரணைக் கமிசனாக அறிவித்தது. பின்னர் ஜூலை 28ல் சென்னை தலைமைச் செயலகம் முன்பு புதிய தமிழகம், தமாகா நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையொட்டி, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை விசாரணைக் கமிசனாக அறிவித்தார். எனினும், இந்த விசாரணை கமிசன் மூலம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நியாயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையின் தாக்குதலை விசாரிக்க மனித உரிமை அமைப்புகள் பொதுவிசாரணை ஒன்றை அறிவித்தனர். மனித உரிமைக்கான கல்வி மற்றும் சார்பு களம், மக்கள் கண்காணிப்பகம், சாக்கோ அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கிராம மேம்பாடு சொசைட்டி, தலித் மனித உரிமைக்கான பிரச்சாரம், மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய ஆறு அமைப்புகளும் இணைந்து பொது விசாரணைக்குழுவை அறிவித்தனர். இந்த குழுவில் 1. சுரேஷ் (பம்பாய் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி), 2. லட்சுமி நாராயணன் (முன்னாள் டிஜிபி), 3. கருப்பன் (முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), 4. வசந்தி தேவி (முன்னாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - துணை வேந்தர்) இடம்பெற்றனர். இந்த குழுவினர் பொதுவிசாரணை மூலம் ஏராளமான சாட்சியங்களை விசாரித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிக்கை காவல்துறையின் சட்டவிரோதமான அத்துமீறல்களை அம்பலப்படுத்தியது. அதுமட்டுமல்ல; உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ரூ. 1 லட்சம் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டுமென்றும் சிபாரிசு செய்தது. தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியது. மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து சிபிஐ (எம்) சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன இயக்கங்களை ஜூலை 30, 1999 அன்று நடத்தியது. சென்னை மாநகரில் ஐந்து இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால், சுவரொட்டிகள் அச்சிடவோ, ஒட்டவோ காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தாக்குதலை எதிர்கொண்ட பாதிக்கப்பட்ட மக்களை சிபிஐ(எம்) நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பாண்டியன், ஆர்.கிருஷ்ணன், எம்.ராஜாங்கம், ஆர்.கருமலையான், கே.ஜி-பாஸ்கரன், பொ.ஜெயராஜ், பி.தியாகராஜன், கே.ஏ.மல்லிகா, ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று தோழர் பி.சம்பத் சந்தித்து நடந்தவைகளை விசாரித் தறிந்தார். அவர்களுக்கு ஆதரவை தெரிவித்தார். நெல்லை மாநகரில் சிபிஐ (எம்) சார்பாக மாபெரும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டது.
பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் அ.சவுந்தரராசன், ஜே.ஹேமச்சந்திரன், பி.சம்பத் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். சிஐடியு சார்பாகவும் தமிழகம் தழுவிய அளவில் விரிவான கண்டன இயக்கங்கள் நடந்தன. மொத்தத்தில், சமூக ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் படுகொலைக்கு ஆளான மாஞ்சோலை தோட்ட தொழி லாளர்களின் போராட்டத்தின் போது கொலைவெறி தாக்குதலை எதிர்கொண்டவர் சிபிஐ (எம்) மாவட்ட செயலாளர் தோழர் வீ. பழனி என்பதும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக சிபிஐ (எம்) மற்றும் சிஐடியு நடத்திய எழுச்சிமிகு போராட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் - இடதுசாரி இயக்கங்கள் அணி திரண்டு போராடியதானது வரலாற்று நிகழ்வுகளாகும்.