மதுரை, ஏப்.3- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதி மக்களுக்கு கொரோனோ நிவாரண நிதி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதோடு அவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை களை அதிகப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் அதே நேரத்தில் மேலூர் பகுதி முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருப்பதும், நியாய விலைக் கடைகள் மூலம் அரசு வழங்கும் நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதும் முறையான நடவடிக்கை அல்ல. இதனால் வர்த்தகர்களும்,
பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே மாநிலத்தின் பிறபகுதிகளைப் போன்று காலை ஆறு மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகள் திறக்கப்படவும், ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கவேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.