tamilnadu

img

பாசிச அபாயத்தை முறிக்க மார்க்சியமே மாமருந்து என்பதை மக்களிடம் சொல்வோம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மாநாடு என்பது கூடிக் கலையும் கூட்டமல்ல! மாற்று அரசியல் சித்தாந்தம், சிந்தனையைத் தூண்டி விட்டு மக்களை கவர்ந்திழுக்கும் மாநாடாக மதுரை மாநாடு அமையும்.  முதல் கடமை ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி மத வெறிப் போக்கைக் கிளறிவிட்டு திருப்பரங் குன்றத்தில் கலவரம் உண்டாக்க முயற்சிக்கின்ற னர். சிறு வாய்ப்பு கிடைத்தால் கூட மதவெறி மாநிலமாக ஆக்க முயற்சிக்கின்றனர்.  எனவே பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது மட்டுமல்ல, அதன் அரசியல் சித்தாந்தத்தை மக்களிடம் வலுவாக அம்பலப்படுத்த வேண்டும்.  பாஜக எவ்வளவு ஆபத்தானது என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். பாசிச வெறி பிடித்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் படி செயல்படும் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது நம் முன்னுள்ள மிகப்பெரிய கடமை. தமிழகத்தில் புதிய அர சியல் சக்திகள் புதிய தலைவர்கள் வரு கிறார்கள். பாசிசமா? பாயாசமா? என்று பேசி பாசிசம் பற்றிய ஆபத்தான உண்மையை கொச்சைப்படுத்துகிறார்கள். அவர்கள் விரும்பி யவாறு அரசியல் மாற்றம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழக மக்களிடம் எதுவும் பலிக்கப் போவதில்லை.

மாற்று அரசியல் கொள்கை

 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம் என்று  மோடி சொல்கிறார். இந்தப் பத்து ஆண்டுகள் போதாதா? வறுமை வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. எரிவாயு, விவசாயம், சுகாதாரத் துறை  மானியங்களை வெட்டிக் குறைத்திருக்கின்ற னர். வருமான வரி ரூ.12 லட்சம் வரை விலக்கு என்பது 140 கோடி மக்களுக்கு பயனளிக்குமா?  மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள்,  கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் சொத்துக்களுக்கு செல்வ வரி 2 சதவிகிதம் போடுங்கள் என்று சொல்கிறோம். இதைச் செய்தாலே அரசுக்கு தேவையான பல லட்சம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும். விவ சாயத்திற்கு, தொழில் வளர்ச்சிக்கு, மாநிலங்களுக்கு நிதி பங்கீடு அளிப்பதற்கு போதுமான நிதி கிடைக்கும். பெட்ரோலுக்கு வரி, டீசலுக்கு வரி என்று மக்கள் தலையில் சுமத்த வேண்டியதில்லை. ஆனால், மோடி  அரசு அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டுகளுக்கு செல்வ வரி போடாமல், கார்ப்ப ரேட் வரியை குறைத்து, ஏழை, எளிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி  வரியை அதிகரிக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க விவசாயத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், பொது தொழில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதைச் செய்தால் எல்லா மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடிய வசதி ஏற்படும். ஏற்றுமதியை நம்பி இருக்க வேண்டியதில்லை. இந்த மாற்றுக் கொள்கைகளை மாற்று அரசியல் பாதையை மக்களிடம் கொண்டு சென்று சிந்திக்க செய்வோம்.

கம்யூனிஸ்டுகளின் பெருமையை மக்களிடம் சொல்வோம்

தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள், பட்டியல் சாதியினர் என அனைவர் மத்தியிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமைமிகு வரலாற்றைக் கொண்டு செல்வோம். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழித்து, ஆண், பெண் ஏற்றத்தாழ்வு பாகுபாட்டை நீக்கி  சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடு கிறார்கள்.  கம்யூனிஸ்டுகளின் போராட்ட வரலாறு, அரசியல் சித்தாந்தம், மாற்று கொள்கைகளை அரசியல், பண்பாடு, கலை என எல்லாத் துறைகளிலும் மக்களிடம் கொண்டு செல்வோம். 

 திருப்பூரில் நடைபெற்ற சிபிஎம் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் பகுதிகள்.