districts

img

பொற்பனைக்கோட்டையில் எலும்பு முனைக் கருவி, தங்கத்துண்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை, பிப்.6-  புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில், சங்க கால மன்னர்களின் கோட்டைக்கான அடையாளங்கள் இருப்பதனால், இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத் தொல்லியல் துறை சார்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்புமுனைக் கருவி, கார்னீலியன் பாசிமணி உள்ளிட்ட 533 தொல்பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட  அகழாய்வுக்கு அனுமதி பெறப்பட்டு, கடந்த 2024 மே 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டன. இதில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் அலுவலர் தங்கதுரை தலைமையிலான குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக்கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், அகேட் கல்மணி, தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடு மண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலானப் பொருட்கள் என 1,743 தொல்பொருட்கள் இதுவரை கிடைத்துள்ளன.  இந்நிலையில் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், கடந்த ஜன.20 ஆம் தேதி மீண்டும் தொடங்கின. இதில், ஓர் அகழாய்வுக் குழியில், 192 - 196 செமீ ஆழத்தில் எலும்பு முனைக் கருவி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 7. 8 கிராம், நீளம் 7. 4 செமீ, விட்டம் 1 செமீ ஆகும். இன்னொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறிய பகுதி கிடைத்துள்ளது.  இது பொற்பனைக்கோட்டை அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக தொல்லியல் ஆய்வாளர்களாகல் கருதப்படுகிறது.