tamilnadu

img

இருண்மைச் சக்திகளை வீழ்த்த உரத்து முழங்குவோம்!

இருண்மைச் சக்திகளை வீழ்த்த உரத்து முழங்குவோம்! காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை.. இன்னும் ஓயாத இந்துத்துவா துப்பாக்கி

எழுத்தாளர்கள்- கலைஞர்களுக்கு எம்.ஏ. பேபி அழைப்பு

சென்னை, ஜூலை 13– மகாத்மா காந்தியைப் படுகொலை செய்வதற்கு கோட்சேவால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி; மாற்றுக் கருத்துகளைப் பரப்பி கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய அறிவுத்தளத்தி னர் மீது தோட்டாக்களைப் பாய்ச்சிய துப்பாக்கி  இன்னும் ஓய்ந்து விடவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி எச்சரித்தார். சமுதாயத்தின் அனைத்து அங்கங்களிலும் மக்களைப் பிளவுபடுத்தும் நஞ்சு ஏற்றப் பட்டுள்ள நிலையில், நல்லிணக்கச் சிந்தனை களை வலுவாகப் பரப்பிடும் வரலாற்றுப் பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக் கும் இருக்கிறது என்றார் அவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்திருப்பதை யொட்டி பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் மதிப்புறு தலை வர் சு. வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடை பெற்ற பொன்விழா கொண்டாட்ட நிறைவு அமர்வில் எம்.ஏ. பேபி சிறப்புரையாற்றினார். அவரது உரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு:

பகை நஞ்சைப் புகட்டும் பண்பாட்டு எதிரிகள்

மொழிகள், நமக்கிடையே அரசியலாக வும் பண்பாட்டுத்தளத்திலும் உணர்வுப்பூர்வ மாகவும் செயல்படுகின்றன. நாம் ஒருவரை யொருவர் அறிந்துகொள்ளச் செய்கின்றன. அர சியலுடன் பண்பாட்டிற்கு எப்போதுமே ஆழ மான பிணைப்பு இருந்து வந்திருக்கிறது. பண்பாட்டு எதிரிகள் பகை நஞ்சைப் புகட்டு வதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்து கிறார்கள். அதைக் கலாச்சார தேசியம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மனிதநேயத்தின் எதிரிகள் தங்களது நச்சுத்தனமான சித்தாந்தங் களைக் கடத்துவதற்கு முயல்கிறார்கள். நாட்டி ற்கு உள்ளேயும் வெளியேயும் அந்த அபாயகர மான நச்சுக்கடத்தலைச் செய்கிறார்கள்.

அச்சுறுத்தப்படும் பண்பாட்டுத் தளம்

உலகின் பல நாடுகளில் புதிய பிரிவினை சக்திகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. அதிகா ரத்தைப் பயன்படுத்திக் குடிமக்களிடையே பகைமையை வளர்க்கின்றன, பிரிவினை களைத் தூண்டுகின்றன. அதற்காகத் தங்களது புனைவுகளையே வரலாறாகச் சித்தரிக்கின்றன அதற்காகப் பண்பாட்டுத் தளம் அச்சுறுத்தப்படு கிறது. இது நமது சமுதாயத்திலும் பிரதி பலிப்பதைப் பார்க்கிறோம். புண்படுத்திவிட்டதாகக் கூறி ஒரு ஸ்டாண்டப் காமெடியன் (நையாண்டிக் கலைஞர்) மீது வழக்குப் போடப்படுகிறது. தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் அப்படி வழக்குப் போட இயலாது. கேரளத்தில் மேடைகளில் உரையாற்றும்போது கைது அச்சமின்றிப் பேச முடியும் என்று மூத்த தலைவர் பிர காஷ் காரத் கூறுவார். அதேபோன்ற பாதுகாப்பு தமிழ்நாட்டிலும் இருக்கிறது.  நாடு முழுதும் அந்த நிலையை வேரூன்றச் செய்ய வேண்டி யுள்ளது.

அறிவுஜீவிகளைக் கொல்லும் ஆர்எஸ்எஸ் துப்பாக்கி

வன்முறைத் தாக்குதல்களும் நடத்தப்படு கின்றன. ஹிட்லர்களும் முசோலினிகளும் ஐரோப்பியத் தயாரிப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தித்தான் படுகொலைகளைச் செய்தார்கள். இங்கேயும் மதவெறியர்கள், அதே துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்து கிறார்கள். அதே துப்பாக்கிதான் இங்கே காந்தியைக் கொல்வதற்கு கோட்சே-வால் பயன்படுத்தப்பட்டது. இத்தகையவர்கள் கோட்பாடு அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கி ஓய்ந்து விடவில்லை; கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் மீது அதே  துப்பாக்கியின் தோட்டாக்கள்தான் பாய்ச்சப் பட்டன. நமது சமுதாயத்தில் ஊடுருவி யிருக்கும் நவீன பாசிசப் போக்கின் விளைவுகள் இவை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லா மலே அது இங்கே ஊடுருவியிருக்கிறது. சமூக சுதந்திரம், மனித உரிமைகள் அனைத்திற்கும் அது சவால் விடுக்கிறது.

கருத்துரிமைக்காக நின்ற எழுத்தாளர்கள்

இந்தச் சூழலில் அரசியல், பண்பாடு இரண்டு  களங்களிலும் தீர்மானகரமான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுதந்தி ரம், குடியரசு முழக்கங்கள் உயர்ந்தபோது எழுத்தாளர்களும் கலைஞர்களும் நடத்திய கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் ஒரு மையமான பாத்திரம் வகித்தன. பண்பாட்டு பாதுகாப்புக் கான எழுத்தாளர்களின்  மாநாடு பாரிஸ் நகரில் நடந்தது. மாக்சிம் கார்க்கி போன்ற முன்னணிப் படைப்பாளிகள் பங்கேற்று ஜனநாயகத்திற் காகவும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் கருத்துரிமைகளுக்காகவும் முழங்கினார்கள். பாரிஸ் மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு ஒருமைப்பாடு தெரிவித்தார்.  இந்தியாவி லிருந்து முல்க்ராஜ் ஆனந்த் போன்றோர் சென்று வந்தார்கள். கூட்டங்களில் மட்டுமல்லாமல் களச் செயல்பாடுகளிலும் பங்கேற்றார்கள். அந்தத் தாக்கத்தில்தான் இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.  

இருண்மைச் சக்திகளுக்கு எதிராக நிற்க வேண்டும்

அப்போது மாக்சிம் கார்க்கி உலக எழுத்தா ளர்களுக்கு விடுத்த கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. போர்வெறி சக்திகளும் அமை திக்கான சக்திகளும் போராடுகிறபோது நீங்கள்  எந்தப் பக்கம்? சமத்துவத்துக்கும் ஏற்றத் தாழ்வுக்குமான சக்திகள் மோதுகிறபோது நீங்கள் எந்தப் பக்கம் என்று அவர் கேட்டார். ஐரோப்பாவின் இருண்மைப் பிரதிநிதிகளாக ஹிட்லர்களும் முசோலினிகளும் இருந்த நிலை யில் கார்க்கி இவ்வாறு கேட்டார். அந்த இருண்மை இங்கேயும் கொண்டு வரப்பட்டது. ஒரு கட்சியை உருவாக்கி அதன் லட்சியம் காந்திய சோசலிசம் என்று அறி வித்தார்கள். அடிப்படையில் காந்தியம், சோச லிசம் இரண்டுக்குமே எதிரானவர்கள் இப்படி  அறிவித்தார்கள். இதற்கும் அங்கே முன்னுதா ரணம் இருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்கு வைத்த பெயர், பொதுத் தொழிலாளர் தேசிய சோசலிச கட்சி.  

பாசிச ஜெர்மனி பாணியில் பயணிக்கும் இந்தியா

ஜெர்மனியில் குடியுரிமையும், வாக்குரிமை யும் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நியூரம்பர்க் கோட்பாடு உருவாக்கப்பட்டது. இங்கேயும், பீகார் மாநிலத்தில் பெரும்பகுதி மக்களின் வாக்குரிமையையும் பின்னர் குடியுரிமையை யும் இல்லாததாக்கும் வகையில் வக்காளர் பட்டியலைத் திருத்தும் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. உலகில், இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எழுத்தாளர்களும் கலைஞர்களும் போ ராடிய பாரம்பரியமும் இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது தான் தமுஎகச. கேர ளத்திலும், “தேசாபிமானி’ வாசக வட்டம்”  என்று ஏற்படுத்தி, முற்போக்கு எழுத்தாளர் களுக்கான அமைப்பாக உருவாக்கினோம். நானும், சுவர் எழுத்துக்கள் எழுதுகிற பின்னணி யோடு அதில் செயல்பட்டேன். அரசியல் கலை வடிவம் பெறுகிற நிலையில், சுவர் எழுத்துகள் கவிதையாக வடிவெடுக்கும் மாற்றம் நிகழ்ந்தது.

நுட்பமான பண்பாட்டுப் போராட்டம் காலத்தின் அவசியம்

நாடு இன்று இருட்டுச் சக்திகளின் தாக்கத் தில் இருக்கிறது. தங்களது நச்சுக் கருத்து களைத் திணிப்பதில் அவர்கள் வெற்றிபெறு கிறார்கள் என்ற சூழலில், நுட்பமான பண் பாட்டுத்தளப் போராட்டத்தை நடத்தியாக வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இணையும் தமுஎகச எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கும் துணை நிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார்.  அவரது உரைச் சுருக்கத்தைப் பத்திரிகையாளர் அ. குமரேசன் தமிழில் அளித்தார்.