tamilnadu

img

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம்..... புதிய பணியிடங்களை உருவாக்க ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்....

 மதுரை:
ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு சு. வெங்கடேசன் எம்.பி., எழுதியுள்ள கடிதம் வருமாறு:

இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. கல்வெட்டுகள் தொடாத வாழ்வின் எந்தவொரு பகுதியும் இல்லை என்கிற நிலையே இன்று இருக்கிறது. இந்திய வரலாறு 98 சதவிகிதம் கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. மௌரியர்கள், சாதவாளிகனர்கள், சுங்கர்கள், குஷானர்கள், குப்தர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட வம்சாவளிகள் கல்வெட்டுகள் மூலமாகவே சமகால வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, 1886ல் இந்திய தொல்லியல் துறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட கல்வெட்டு ஆய்வுத் துறை, வரலாற்று ஆய்வுக்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது.இதுவரை, இந்தியா முழுவதிலும் 80,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறையகல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. 80,000 கல்வெட்டுகளில் சுமார் 70 சதவிகிதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளில் இருக்கின்றன. மீதி 30 சதவிகிதம் பிற மொழிகள்.135 வருட பாரம்பரியம் கல்வெட்டு ஆய்வுத்துறைக்கு இருந்தாலும் போதுமான பணியாளர் கள் இல்லாத காரணத்தால் 50 சதவிகிதமான கல்வெட்டுகள் மட்டுமே துறை அறிக்கைகளில் பதிப்பிக்கப்பட்டிருக் கின்றன. மீதமுள்ள 50 சதவிகிதம் கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.

செய்வதற்கு பல வேலைகள் இருந்தபோதும் கல்வெட்டு ஆய்வுத் துறை மிக சொற்ப அளவிலான பணியாளர் களுடனேயே இயங்குகிறது. போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தேங்கியிருக்கும் சில முக்கியமான பணிகளை உங்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.

$   கல்வெட்டுகளின் காகித பதிவுகள் மோசமான நிலையில் இருப்பதால் 80,000 கல்வெட்டுகளை உடனடியாக கணினிமயமாக்கும் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

$    இதுவரை பதிப்பிக்கப்படாத 40,000 கல்வெட்டுகளை பதிப்பிக்க முன்னுரிமை தரப்பட வேண்டும்.

 அகழ்வு மற்றும் சுரங்கப் பணிகளால் காணாமல் போக கூடிய ஆபத்தில் இருக்கும் கல்வெட்டு செல்வத்தை உடனடியாக நகலெடுத்து, பொருள் உணர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டிய பணி, மிக அவசரமான முன்னு
ரிமை தரப்படவேண்டும்.

$   கல்வெட்டு ஆய்வைப் பொறுத்தவரையில் பழங்காலவியலாளர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். திராவிட மொழிகள், பாலி, சமஸ்கிருதம், பிற பிராந்திய மொழிகள் போன்ற பழங்கால மொழிகளிலும், பிரம்மி, கரோஷ்டி, அரமைக், கிரேக்கம், சரதா, கௌடி,வட்டலேட்டு, கிரந்தம் போன்ற லிபிக்களிலும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

$   சிந்து எழுத்துரு மற்றும் ஷெல் எழுத்துரு விலுள்ள மர்மங்கள் நீக்கப்பட்டு அவை புரிந்து கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

$   கல்வெட்டுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து அவற்றை காப்பாற்ற,  கல்வெட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.

$   இன்னும் பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படவும், பொருள் உணரவும் பதிப்பிக்கப்படவும் வேண்டியிருப்பதால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்தது இரண்டு கல்வெட்டு ஆய்வாளர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.  

மேற்கண்ட அனைத்து விசயங்களும் துறை ரீதியாக நடக்க வேண்டுமென்றால், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், புதிய பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்.ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையில் 758 இடங்களை உருவாக்கும் ஒரு பரிந்துரை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இருப்பதால், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்குவதென்பது உங்களுக்கு கடினமான விசயமாக இருக்காது.இவ்வாறு சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

                                        ******************

அமைச்சரின் பதிலும், எம்.பி.,யின் மறு பதிலும்....

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் இந்த கடிதம் கிடைக்கப் பெற்ற ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல், டுவிட்டர் மூலமாக சு.வெங்கடேசனுக்கு தமிழிலேயே பதிலளித்தார். அவர் தனது டுவிட்டர் பதிலில், “தங்களுக்கு இந்தியாவின் கல்வெட்டுகள் பற்றிய அறியாமை உள்ளது. தமிழ்நாட்டின் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவை நான் மதிக்கிறேன். ஆனால் நமது பேச்சு கிணற்று தவளைப் போல் அல்லாமல் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு உடனடியாக டுவிட்டர் மூலமாக பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி., “இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் அவர்கள் தமிழில் டுவீட் செய்ததற்கு எனது பாராட்டுக்கள். இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள் என நான் கேட்டுள்ளேன். இதில் கிணறும், தவளையும் எங்கிருந்து வந்தன” என்று கூறினார். மேலும், “எனது அறியாமை அல்ல, உங்களின் புரியாமைதான் பிரச்சனை. தமிழ்நாட்டின் அமைச்சரின் அறிவை மதித்தமைக்கு நன்றி. வரலாற்றுக்கு அதன் முழு தன்மையோடு உயிரூட்டம் அளியுங்கள் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்தான் எங்களின் அறிவு மரபு” என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. அமைச்சருக்கு பதிலளித்தார்.

இந்த பதிலுக்குப் பிறகு மீண்டும் ஆங்கிலத்தில் டுவீட் செய்து பதிலளித்த அமைச்சர் பிரகலாத் பட்டேல், 2,76,449 ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், காஞ்சிபுரம் பல்கலைக் கழகம், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் ஆகிய இடங்களில் அவை வைக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார்.இதற்கு மீண்டும் பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி., “எனது கடிதத்தை மீண்டும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கல்வெட்டு ஆய்வாளர்கள் பற்றாக்குறையால்தான் 80 ஆயிரம் கல்வெட்டுகளில் இன்னும் 50 சதவீதம் கல்வெட்டுகள் படிக்கப்படாமல், ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. நீங்கள் ஓலைச் சுவடிகளை பற்றி பதில் சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் குறைபாடு உள்ளது. சென்னையில் உள்ள ஓலைச் சுவடிகள் ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 வருடங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற பிரச்சனையையும் உங்களிடம் எழுப்ப விரும்புகிறேன். நாங்கள் ஒன்றை பேசினால் நீங்கள் வேறொன்றுக்கு பதில் சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. கல்வெட்டுகள் மற்றும் ஓலைச் சுவடிகள் ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் உடனடியாக கவனித்து தீர்வுகாணுங்கள்” என்று கூறினார்.