அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பதாக மருத்துவர் பேசிய ஆடியோ குறித்து விசாரணை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10ஆயிரம் வசூல் செய்வதாக மருத்துவர் பேசிய ஆடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , “தென்காசியில் சுகாதாரத்துறை நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதனை நானும் கேட்டேன். பணம் வசூல் செய்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவது கிடையாது. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர்களுடைய சாப்பாடு கூட நான் சாப்பிடுவது கிடையாது. நான் ஓட்டலில் தான் சாப்பிடுவேன். எனக்கு சால்வை, புத்தகங்கள் கூட பரிசளிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கின்றேன். வெளியான ஆடியோவில் இருக்கும் மருத்துவரின் குரல் யாருடைய குரல்? உண்மைதானா என்று விசாரிக்க சென்னையில் இருந்து ஒரு சுகாதாரத்துறை இணை இயக்குநரை அனுப்பியுள்ளேன். யார் என்று தெரிந்தால் இன்று மாலைக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தென்காசியில் நாளை நடக்க இருந்த நிகழ்ச்சி, பங்குனி உத்திரம் என்பதால் தான் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார்.