இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கனலிலும், தொழிலாளர் இயக்கத்தின் புயலிலும் உருவான மாபெரும் தலைவர் பி. ராமமூர்த்தி. 1908 செப்டம்பர் 20-ல் சென்னையில் பிறந்த அவர், இந்து உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சுதந்திரக் கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டார்.
இளம் வயதிலேயே துணிச்சலான முடிவுகள் எடுத்தவர். 1920-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் அழைப்பை ஏற்று, பள்ளிப் படிப்பை விட்டு, யாரிடமும் சொல்லாமல், டிக்கெட் கூட வாங்காமல் அலகாபாத் சென்று நேருவின் தேசியப் பள்ளியில் சேர்ந்தார். நேருவிடமிருந்து நேரடியாக தேசிய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம் கற்றார்.
கல்லூரிப் படிப்பின்போது காங்கிரஸ் ஊழியராக இருந்ததற்காக ஆங்கிலேய முதல்வரால் மிரட்டப்பட்டபோது, அதற்கு அஞ்சாமல் காசி வித்யாபீடத்திற்கு மாறினார். 1927-ல் சைமன் கமிஷனுக்கு எதிராக மாணவர்களை திரட்டி கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார். 1930-ல் பி.எஸ்.சி தேர்வு எழுதிய மறுநாளே அந்நியத் துணி எரிப்பில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
1933-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நடந்த சம்பவம் அவரது வீரத்தை வெளிப்படுத்தியது. குதிரைப் படையினர் கூட்டத்தைக் கலைக்க வந்தபோது, கால் ஊனம் காரணமாக ஓட முடியாத அவர், மூன்று குதிரை வீரர்களின் சவுக்கடிகளை தாங்கிக்கொண்டு, இரத்தம் சொட்ட சொட்ட ஒரு செருப்புக் கடையில் தஞ்சம் புகுந்தார்.
சமூக நீதிக்கான போராட்டங்களிலும் முன்னணியில் நின்றவர். 1932-ல் காந்தியின் அரிஜன சேவா சங்கத்தில் இணைந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தலித் வைணவர்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக தலித் மக்களுக்கு கோயில் நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமையை பெற்றுத் தந்த பெருமை அவருக்கே உரியது. காந்தியடிகள் தனது ‘அரிஜன்’ பத்திரிகையில் “ஒரு ருசிகரமான தீர்ப்பு” என்று பாராட்டி எழுதினார்.
1934-ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. ஐயங்கார் போன்றோருடன் தொழிற்சங்கங்களை உருவாக்கினார். 1936-ல் சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே ஆகியோரின் வழிகாட்டுதலில் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் குழுவில் இணைந்தார்.
1940-ல் சென்னை சதி வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை. விடுதலைக்குப் பின் மதுரை, கோவை, விக்கிரமசிங்கபுரம், நெல்லிக்குப்பம் என தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்களை வளர்த்தெடுத்தார். 1952-ல் மதுரை வடக்கு தொகுதியில் சிறையிலிருந்தபடியே சட்டமன்ற உறுப்பினரானார்.
தமிழக வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், சேலம் உருக்காலை ஆகியவற்றை நிறுவ அரும்பாடுபட்டார். தொழிலாளர் நலனுக்காக 1970-ல் சிஐடியு அமைப்பை உருவாக்கி அதன் பொதுச் செயலாளரானார்.
நாடாளுமன்றத்தில் 14 ஆண்டுகள் மக்கள் குரலாக ஒலித்தவர். காலிஸ்தான், அசாம் பிரச்னை, தமிழர்கள் மீதான தாக்குதல்கள் என அனைத்திலும் வலுவான குரல் கொடுத்தார். பொருளாதார விவாதங்களில் அவரது அறிவாற்றல் பளிச்சிட்டது.
அவரது குடும்பமே கட்சிக் குடும்பம். மனைவி அம்பாள், மகள்கள் டாக்டர் பொன்னி, வழக்கறிஞர் வைகை என அனைவரும் இயக்கப் பணியில் ஈடுபட்டனர். 1987 டிசம்பர் 15-ல் மறைந்த அவரது நினைவாக 2007-ல் மதுரையில் ஆளுயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
சுதந்திரப் போராளி, தலித் உரிமைக்குரல், தொழிலாளர் தளபதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், மார்க்சிய சிந்தனையாளர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட இந்த மாமனிதரின் வாழ்க்கை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொற்காலத்தை பிரதிபலிக்கிறது. அவரது பெயர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும், தொழிலாளர் இயக்க வரலாற்றிலும் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.
குடும்பத்துடன் தோழர் பி.ராமமூர்த்தி. (வலமிருந்து) அம்பாள் ராமமூர்த்தி, பி.ஆர், தோழர் ஏ.நல்லசிவன், குழந்தைகள் பொன்னி, வைகை
அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஒன்றில் சக தோழர்களுடன் ...
கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் தோழர்கள் (இடமிருந்து) கே.ரமணி, ஏ.நல்லசிவன், பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, ஆர்.உமாநாத், பாப்பாஉமாநாத் உள்ளிட்டோர்.
தமிழகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்கள் பி.ராமமூர்த்தியும், எம்.ஆர்.வெங்கட்ராமனும் (1967, மதுரை)
1967 - மதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழ் அலுவலக கட்டிடத் திறப்பு விழாவில் தோழர் பி.ராமமூர்த்தி. அருகில் (வலது) தோழர் ஏ.பாலசுப்பிரமணியம், (இடது) தோழர்கள் வி.கார்மேகம், ஆர்.ராமராஜ்.