tamilnadu

img

சுகாதார அமைச்சரின் மதுரை விஜயமும் கொரோனா நோயாளிகளின் அங்கலாய்ப்பும்

மதுரை:
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மட்டும் 85 சதவீத அளவிற்கு உள்ளது. மொத்த உயிரிழப்பில் 87 சதவீதம் இந்த மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையைப் போன்ற நிலை மதுரையில் இல்லை; மதுரையில் சமூகப்பரவலும் இல்லை” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “மதுரைமாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்பகட்டத்தில் 500 ஆக இருந்த பரிசோதனைகளை தற்பொழுது 1500 ஆக உயர்த்திஇருக்கிறோம். மதுரை மாவட்டத்தில் இதுவரை 563 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந் துள்ளனர். மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 1400 படுக்கைவசதியுடனும், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் 400 படுக்கை வசதிகளுடன் என மொத்தம் 1800 படுக்கை வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது. வென்டிலேட்டர்களும் போதுமானஅளவு உள்ளது” என்றார்.

மதுரையில் தென்மாவட்ட மக்களின் இதயமாக விளங்கிவரும் மதுரை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 3,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுகசட்டமன்ற உறுப்பினர்கள் பி.மூர்த்தி, டாக்டர் சரவணன் ஆகியோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஒரே ஒரு நாள் மட்டும்சோதனை எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது. தற்போது மீண்டும் படுத்துக்கொண்டது. மதுரையில் ஏன் 3,000 சோதனைகள் மேற்கொள்ளள முடியாது என்ற காரணத்தைக் கூறி தமிழகமுதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்துவருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரைவந்துசென்ற நிலையில் ஞாயிறன்றுகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட் டுள்ள சிலரிடம் தொலைபேசி மூலமாகபேசும் வாய்ப்பு கிடைத்தது. பலர் உணவுபரவாயில்லை என்றனர். பலர் வாயில் வைக்கமுடியவில்லை என்றனர். பலர்வயிற்றுக்குப் போதவில்லை என்றனர்.பெண்கள் சிலரிடம் பேசியபோது, கொரேனா சாவை விட பசியால் நாங்கள்செத்துவிடுவோம் போலிருக்கிறது, டீ,காபி தருவதில்லை. காலையில் மாத்திரையும் தண்ணீரும் வந்துவிடுகிறது. உப்புமா கொடுத்தார்கள். அதை வாயில்வைக்க முடியவில்லை என் கண்ணெதிரிலேயே பலர் குப்பையில் கொட்டினார்கள் என வேதனையை வெளிப்படுத்தினர்.

கழிவறை, குடிநீர் வசதி குறித்து கேட்டதற்கு பெண் ஒருவர் கூறுகையில் கழிவறையை சமயங்களில் பூட்டி விடுகிறார்கள்; பலர் தரையில் தான் படுத்துள்ளனர் என்றார். மேலும் மருத்துவர்கள் வரவில்லை. செவிலியர்கள் வருகிறார்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொரோனா நோயாளிகள் சிசிச்சை பெறும் வார்டின் கழிவறைகளை சுத்தம்செய்ய வேண்டும் என்றும் கூறினார்.நோயாளிகளின் கூற்றுப்படி உணவின் தரம் போதுமானதாக இல்லை, அதை அதிகப்படுத்த வேண்டும். தரையில் படுத்துள்ளவர்களுக்கு படுக்கை வசதி செய்துதர வேண்டும்.திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி மருத்துவமனையிலேயே சோதனை செய்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்கள் அந்தந்த ஊர்களிலேயே தங்கிக்கொள்வார்கள். எல்லோரையும் மதுரைக்கே அனுப்புகின்றனர். மனைவி, குழந்தைகள், உறவினர்கள் எங்கள் நிலை என்னவென அறிய ரோட்டிலேயே காத்திருக்கின்றனர் என்றார் திருமங்கலம் பகுதியிலிருந்து சிகிச்சை பெற்றும் வரும் நபர்ஒருவர்.