மதுரை:
ஒமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் ஜாமீன் கேட்டு தாக்கல்செய்த மனுக்களை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார். இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் முதன் முறையாக விசாரணைக்கு வந்த போது யுவராஜ் உட்பட 14 பேரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். செல்வராஜ் நேரில்ஆஜரானார். பின்னர் யுவராஜை திருச்சி ராப்பள்ளி சிறையில் அடைக்கவும் மற்ற 13 பேரை மதுரை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் வியாழனன்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரித்தார். அப்போது யுவராஜ் திருச்சிராப்பள்ளி சிறையில் இருந்தவாறும், மற்ற 13 பேரும் மதுரைசிறையில் இருந்தவாறும் வீடியோ கான் பரன்ஸ் முறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மதுரை சிறையில் இருக்கும் குமார் என்ற சிவக்குமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கத்துரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சந்திரசேகரன், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.விசாரணைக்குப்பின் தற்போதைய நிலையில் 12 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி எனக்கூறப்படும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யவில்லை.கோகுல்ராஜ் கொலை வழக்கின் சாட்சிகள் விசாரணை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.