tamilnadu

img

வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தின் அழைப்பே காந்தியின் தியாகம்! கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழஞ்சலி

வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தின் அழைப்பே காந்தியின் தியாகம்!  கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழஞ்சலி

திருவனந்தபுரம், ஜன. 30 - “இந்தியாவின் இதயம் சங்பரி வாரத்தின் வகுப்புவாத சித்தாந்தத்தால் துளைக்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆகின்றன. காந்திஜியின் நினைவுகளுக்குக் கூட சங்- பரிவார் அஞ்சுகிறது!” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வெறுப்பு அரசியலின் உருவகம் கோட்சே! மகாத்மா காந்தியின் 78-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமது சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “காந்திஜியைக் கொன்றது கோட்சே,  என்ற நபர் அல்ல, மாறாக சங்பரிவாரத்தால் ஊக்குவிக்கப்பட்ட வெறுப்பு அரசியலின் உருவகம். கொலையாளி பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மையை எதிரியாகக் காணும் ஒரு நச்சு வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே 1948 ஜனவரி 30 அன்று வெளிப்படுத்தினார். அந்தக் கொள்கை இன்றும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களை அழிக்க முயற்சிக்கிறது. காந்தி மீதான பயம்  இன்றும் தொடர்கிறது! சங் பரிவாரத்தால் கற்பனை செய்யப் பட்ட அந்நியப்படுத்தல் அரசியலுக்கு நேர் எதிரானது காந்திஜியின் தொலை நோக்குகள். ‘ஒரே தேசம், ஒரே கலாச்சாரம்’ என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலை  திணிக்க முயற்சிப்பவர்களை எதிர்க்கும் வகையில் காந்திஜி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஆதரித்தார். மதச் சார்பின்மை குறித்த அவரது சமரசமற்ற நிலைப்பாட்டிற்கு அஞ்சியதாலேயே அவர்கள் காந்திஜியைக் கொன்றனர், மேலும் அந்த பயம் இன்னும் அவர்களிடையே உள்ளது. ஒன்றிய அரசு சாமானிய மக்களின் வாழ்க்கையிலிருந்து காந்திஜியின் பெயரை நீக்க முயற்சிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து காந்திஜியின் பெயரை நீக்குவது அதன் ஒரு பகுதியே ஆகும்.  மதச்சார்பற்ற பாரம்பரியம் ஒருபோதும் சரணடையாது! இந்தத் திட்டத்திற்கான செலவை மாநிலங்களின் மீது சுமத்தி, தனக்கான பங்கை ஒன்றிய அரசு குறைக்கும் நிலையில், அதற்கு எதிராக கேரளம் முன்வைக்கும் மாற்று அரசியல், காந்திஜியின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக் கான தொலைநோக்கு பார்வைகளின் தொடர்ச்சியாகும். வரலாற்றை மீண்டும் எழுதவும், வகுப்புவாத கொலையாளிகளை ஹீரோக்களாக உயர்த்தவும் முயற்சிக்கும் சக்திகள் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களை வேட்டையாடும் வகுப்புவாத பாசிசத்தின் முன் இந்தியாவின் மதச்சார்பற்ற பாரம்பரியம் சரணடையாது என்பதை நாம் அறிவிக்க வேண்டும். காந்திஜியின் தியாகம் என்பது வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்திற்கான தொடர்ச்சியான அழைப்பாகும், மேலும் அந்தப் போராட்டத்தை நாம் எடுத்துக்கொண்டு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவுக்காக முன்னேற வேண்டும். இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.