tamilnadu

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி

மதுரை, மே 13-திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டுமல்ல. ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வேண்டாத தேர்தலைத் திணித்தது அதிமுகதான்; தேர்தலில் ஆட்சி பறிபோவது நிச்சயம் என்ற நிலையில் உள்ள அதிமுக நீதிமன்ற உத்தரவின் மூலமே இந்தத் தொகுதிகளில் தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தொகுதியில் வாக்குக் கேட்கும் தார்மீக உரிமையை, அருகதையை இழந்து நிற்கும் அதிமுக தோல்விபயத்தில் தங்களது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு “இரண்டாவது ரவுண்டு” அழைத்து வந்துள்ளது.இரண்டாவது ரவுண்டு அல்ல. இன்னும் எத்தனை ரவுண்டு வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக தோல்வியைத் தழுவும் என்கிறதாம் உளவுத்துறை தகவல்கள்.திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ் உடல்நலக்குறைவால் மறைந்தாலும், அவர் தேர்தலுக்காக தாக்க செய்த வேட்புமனு பிரமாணபத்திரத்தில் பெற்றது போலி கைரேகை தான். ஜெயலலிதாவையே ஏமாற்றியவர்கள் அதிமுகவினர். இந்தச் சூழலில், தோல்வியிலிருந்து மனதைத் தேற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் சனிக்கிழமை இரண்டாவது ரவுண்டு வந்தார். இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படாத, இருக்கிற தொழிற்சாலைகளையும் மூடிய அவர், வடபழஞ்சி தொழிற்பூங்காவை விரிவுபடுத்தி நேரடியாக 40 ஆயிரம் இளைஞர்களுக்கும், மறைமுகமாக 25 ஆயிரம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயில் எட்டாண்டுகளாக விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டுவராத அதிமுக இது குறித்து எடப்பாடியிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.அவரோ திடீரென ஞானதோயம் வந்தது போல், நான் ஒரு விவசாயி. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கடுமையாக வேளாண் பணி மேற்கொண்டிருக்கிறேன். இது மண்வெட்டி பிடித்த கை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது வெயில் என்றும் கூட பாராமல் மக்களை சந்தித்து வாக்கு கேட்டுள்ளேன். எனக்கு பொதுமக்களின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு தெரியும் என்றெல்லாம் வாக்காளர்களிடம் புலம்பினார்.மேலும், வடபழஞ்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.20 கோடி செலவில் உட் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர். காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் எளிதாக சாலையைக் கடக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டித்தரப்படும் என்றும் கூறினார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதல் குரல் கொடுத்தவர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொ.மோகன் என்பதை தவறியும் உச்சரித்துவிடாத எடப்பாடி பழனிசாமி, தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் போது, ஏழை-எளிய மக்களுக்கு, நல்ல தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றார்.திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வீட்டுவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கும் கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற சாதாரண கோரிக்கைகளை கூட அதிமுகவினர் நிறைவேற்றவில்லை, வடிவேல்கரை, வாணங்குளம், ஆரியான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், கண்மாய்கள் ரூ.2 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் விமான நிலையம் போன்று அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரச்சாரம் செய்ததுதான் வேடிக்கையாக இருந்தது.தோல்விபயத்தில் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் தொகுதியைச் சுற்றிவர தேர்வுக்கு அட்டை மற்றும் பேப்பர்களுடன் செல்லும் மாணவர்களைப் போல அதிமுகவினர் தெருத்தெருவாக சுற்றிவருகின்றனர். இவர்களுக்கிடையில் தேர்தல் பறக்கும் படையும் தொகுதி முழுவதும் பறந்துகொண்டுதானிருக்கிறது.