பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் என்டிஏ ஒரு துரோகக் கூட்டணி
முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்! சென்னை, ஜன. 30 - என்டிஏ என்கிற பெயரில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. உருவாக்கி யிருக்கும் கூட்டணிக்கு என்று எந்தக் கொள்கையும் கிடையாது! அது, முழுக்க முழுக்க கட்டாயத்தினாலும், ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும் கூடியுள்ள துரோகக் கூட்டணி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேலும் கூறியதாவது: எனது கேள்விகளுக்கு பாஜகவின் பதில் எங்கே? பாஜக வைத்த குற்றச்சாட்டு களுக்கு எல்லாம் நான் ஆதாரத் தோடு பதில் சொல்லிவிட்டேன். ஆனால், அவர்களோ, நாங்கள் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை! இப்போது மக்கள் முன்பாக மீண்டும் கேட்கிறேன்… இந்தி திணிப்பை ஏற்காததால் கொடுக்காமல் இருக்கும் கல்வி நிதி எப்போது வரும்? பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகைகூட முறையாக தரவில்லையே ஏன்? கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது அனுமதி வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? - இப்படி ஏராளமான கேள்வி கள் இருக்கின்றன. இது எதற்குமே அவர்களிடம் இருந்து பதில்வராது! மக்களைக் காப்பதே நாட்டுப்பற்று! ஏனென்றால், இது எல்லாமே, பாஜக தமிழ்நாட்டிற்கு செய்திருக்கக் கூடிய துரோக லிஸ்ட்! அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும் போது, அந்த லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது! நாங்கள் எதற்காக இவ்வளவையும் பேசு கிறோம் என்றால், நம்முடைய இந்திய நாடு ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவையும் சொல்கிறோம். நாங்கள் நாட்டின் யூனிட்டிக் காகப் பேசுகிறோம். பாஜகவோ யூனிஃபார்மிட்டி பேசி, பாசிச அரசியல் செய்கிறது! மாநிலங்கள் தான், நாட்டின் அடித்தளம்! இந்தியா என்பது, “யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்”. இதை பா.ஜ.க. உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு என்று நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தையும், இந்த நாட்டில் வாழும் மக்களையும் காப்பாற்றுவதுதான் உண்மையான நாட்டுப்பற்று என்று நாங்கள் அழுத்தமாக சொல்கிறோம்! ‘நீட்’ விலக்கு பற்றி பாஜகவிடம் பேசுவார்களா? என்டிஏ என்கிற பெயரில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. உருவாக்கி யிருக்கும் கூட்டணிக்கு என்று எந்தக் கொள்கையும் கிடையாது! முழுக்க முழுக்க கட்டாயத்தினா லும், ஒரு சிலரின் சுயநலத்திற்காக வும் கூடியுள்ள துரோகக் கூட்டணி அது! நான் கேட்கிறேன்… நீட் தேர்வு விலக்குப் பற்றி அக்கறை யுடன் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சி யினர், அவர்களின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.-விடம் அதை வலியுறுத்த ஏன் தயங்கு கிறார்கள்? அஞ்சி நடுங்குகிறார்கள்? இந்தித் திணிப்பு குறித்து கேள்வி எழுப்பத் தயாரா? தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக வலுக்கட்டாயமாக திணித்திருக்கும் திட்டங்கள் பற்றி குரல் எழுப்ப திராணியில்லாமல் இருப்பவர்கள், நெஞ்சை நிமிர்த்தி எப்படி மக்களுக்காக கேள்வி எழுப்புவார்கள்? தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காப்பதற்கு எப்படி தலைநிமிர்ந்து பேசுவார்கள்? அதனால்தான், நடைபெற இருக்கின்ற தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ என்று அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய என்டிஏ கூட்டணியை, அடுத்தடுத்த துரோகங்களுக்கான அச்சார மாகதான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்! நான் உறுதியாக சொல்கிறேன்… என்டிஏ-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியைவரக்கூடிய தேர்தலில் தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
