tamilnadu

img

முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் : சாம்சங் தொழிலாளர்களிடம் தலைவர்கள் உறுதி

கைது செய்யப்பட்ட சாம்சங் தொழி லாளர்களை திருமண மண்டபங் களுக்குச் சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன், துணைப் பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், கே. சாமுவேல் ராஜ், மாநி லக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயி னார், ப. சுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி. சங்கர், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா உள்ளிட்டோர் சந்தித்தனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், “கடந்த 31  நாட்களாக தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழி லாளர்களின் கோரிக்கை நியாய மானது”, என்றும்; “இந்த விவகாரத்தில் முதலமைச்சர்  உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.  மேலும், “சாம்சங் நிறுவனத்தில் பெரும்பான்மையான தொழி லாளர்கள் அமைத்திருக்கும் சங்க த்தை பதிவுசெய்ய வலியுறுத்தி இரண்டொரு நாளில் முதலமைச்சரை, தோழமைக் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்!” என்றும் தெரிவித்தனர். தமிழக வாழ்வுரி மை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏவும் சுங்குவார்சத்திரத்திற்கு நேரில் வருகை தந்தார். எனினும் அவரால் தொழிலாளர்களை சந்திக்க முடியாத நிலையில் தமது ஆதரவு எப்போதும் தொழிலாளர்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் சுங்குவார்சத்திரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர். சி. சங்கர் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. நேரு, சௌந்தரி, வழக்கறிஞர் பிரதாபன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.