tamilnadu

கல்பற்றா டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

கல்பற்றா டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

வயநாடு மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு பேரிடர்களால் முண்டக்கை, சூரல்மலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கல்பற்றாவில் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வரும் டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கும்.  நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக ரூ.26 கோடி நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை ஏப்ரல் 3 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கவுள்ளது. பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்தக் கட்டுமானப் பணிகளை ஊராளுங்கள் லேபர் காண்ட்ராக்ட் சங்கம் மேற்கொண்டு வருகிறது. முதலில், ஒரு மாதிரி வீடும் இதனுடன், நகரப் பகுதியில் சாலை கட்டுமானப் பணிகளும் தொடங்கும். 400க்கும் மேற்பட்டவர்களின் பயனாளி பட்டியல் இரண்டு கட்டங்களாக தயாரிக்கப்பட்டாலும், வீடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்படும். இந்த மாதிரி வீடு அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். அதன்மூலம் பயனாளிகள் கட்டடத்தின் தரத்தை சரிபார்க்க வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு கிளஸ்டரிலும் 20 வீடுகள் என இருபதுக்கும் மேற்பட்ட கிளஸ்டர்கள் இருக்கும். பசுமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்டப்படும். இவை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாக்க முடியும். கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்புக்கான வசதிகள் இருக்கும். மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் நிலத்தடியில் இருக்கும். ஆறு மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.  பிரதான சாலையிலிருந்து தொகுப்பு வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களுக்குச் செல்லும் சாலைகள் இருக்கும். பிரதான சாலை 12 மீட்டர் அகலம் வரை இருக்கும். பிரதான சாலையிலிருந்து குடியிருப்புகள் வரையிலான சாலை ஐந்து மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். வீடுகள் மற்றும் சாலைகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பொது கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஒரு சுகாதார மையம், அங்கன்வாடி, பொதுச் சந்தை, சமூக மையம், பல்நோக்கு மண்டபம், நூலகம் போன்றவை கட்டப்படும். நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னமும் அமைக்கப்படும். சூரிய சக்தியில் இயங்கும் வீடுகள் முண்டக்கை-சூரல்மலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கல்பற்றாவில் கட்டப்படும் டவுன்ஷிப் எரிசக்தி தன்னிறைவு பெற்றதாக இருக்கும். இதற்காக, அனைத்து வீடுகளிலும் பொது கட்டிடங்களிலும் சூரிய மின் தகடுகள் நிறுவப்படும். பயனாளிகள் தாங்கள் பயன்படுத்தியதுபோக விஞ்சிய மின்சாரத்தை கேஎஸ்இபி-க்கு வழங்குவதன் மூலமும் வருமானம் ஈட்டலாம். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் (CIAL) சமூக பொறுப்பு நிதியைப் பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு கிலோவாட் சூரிய சக்தி தகடுகள் நிறுவப்படும். சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், பொதுச் சந்தைகள், சமூக மையங்கள், பல்நோக்கு அரங்குகள் மற்றும் நூலகங்கள் போன்ற பொது கட்டிடங்களிலும் சூரிய சக்தி நிறுவப்படும். இந்த நகரத்தில் 110 kV துணை மின் நிலையம் கட்டப்படும். ஒன்றிய அரசு அனுமதித்த கடனில் சேர்க்கப்பட்டுள்ள 16 திட்டங்களில் இதுவும் ஒன்று. ரூ.13.50 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எல்ஸ்டன் எஸ்டேட்டில் இரண்டரை ஏக்கரில் 12.5 மெகாவாட் (MVA) திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகள் நிறுவப்படும். துணை மின் நிலையம் மூலம் நகரத்திற்கு வெளியே உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படலாம். காரப்புழாவில் நகரமைப்புக்காக ரூ.22.50 கோடி செலவில் கட்டப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான விரிவான திட்ட ஆவணத்தை நீர்வளத் துறை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. நகராட்சியில் தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் உறுதி செய்யப்படும்.