பத்திரிகையாளர்களின் கைபேசிகளை பறிமுதல் செய்து, அவர்களின் தனிப்பட்ட தக வல்களை அணுகுவது பத்திரிகை சுதந்தி ரத்தின் மீதான தாக்குதல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எப்ஐஆர் (FIR) வெளியில் கசிந்த விவகாரத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) பத்திரிகையாளர்களை விசாரணைக்கு அழைத்து, அவர்களின் கைபேசிகளை பறிமுதல் செய்திருந்தது. இதற்கு எதிராக, பத்திரிகையாளர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வியாழக்கிழமை யன்று (பிப். 6) இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளை உடனடியாக திரும்ப வழங்க உத்தரவிட்டார்.
“பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் சிறப்பு உரிமை பெற்றவை. 1978-ஆம் ஆண்டு பத்திரிகை சட்டப்பிரிவு 15(2)-இன் படி எந்தவொரு பத்திரிகையாளரும் தகவல் மூலங்களை வெளியிட வேண்டிய அவசிய மில்லை” என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். மேலும், எப்ஐஆர்-ஐ பொதுமக்கள் அணுகக்கூடிய சிசிடிஎன்எஸ் (CCTNS) போர்ட்டலில் பதிவேற்றியது தவறு என்றும், உச்சநீதிமன்றம் பாலியல் வன்முறை, தீவிரவாதம் போன்ற வழக்குகளின் எப்ஐஆரை பொது போர்ட்டலில் பதிவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். “தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவேற்றப்பட்டது என காவல்துறை கூறுவது வருத்தமளிக்கிறது” என்றும் நீதிபதி கவலை தெரிவித்தார்.