தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டு இன்று துவங்குகிறது
நாகப்பட்டினம், அக். 12- செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நூற்றாண்டு இன்று (அக். 13) துவங்குகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமைகளாக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் விடுதலைக்காக, சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காக பாடுபட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவராக, பாங்கல் ஊராட்சிமன்றத் தலைவராக, தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக, திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவராக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக, சிறைக்கு அஞ்சா வீரராக திகழ்ந்த தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி அவர்களின் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்வுகள் அக். 13 மாலை 5 மணிக்கு, பாங்கலில் நடைபெறுகிறது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி அவர்களின் சமூக அர்ப்பணிப்பு குறித்து சிறப்புரையாற்றுகிறார். அதேநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சிக் கிளைகளிலும் தோழர் பி.எஸ்.டி-யின் படத்தை வைத்தும், கட்சிக் கொடியேற்றியும், நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அதேபோல் 2026 ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக்குழுக்கள் இணைந்து தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் நூற்றாண்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடுவது என கட்சியின், மாநிலக்குழு அழைப்பிற்கேற்ப நாகப்பட்டினம் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.