தோழர் வீர. அருண் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சென்னை, ஜன. 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் வீர. அருண் மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வடசென்னை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் வீர. அருண் (வயது 76) அவர்கள், வியாழக் கிழமையன்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் வீர. அருண், சென்னையில் அசோக் லேலண்ட்டின் இணை நிறுவனமான எண்ணூர் ஃபவுண்டரிஸ் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிக்குழு செயலாளராகவும், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) வடசென்னை மாவட்டப் பொருளாளராகவும், திருவொற்றியூர் பொதுத் தொழிலாளர் சங்கம், மாவட்ட கட்டுமான சங்கம், மீனவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் தலைமை பொறுப்பில் இருந்து செயல்பட்டவர். சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பல்வேறு ஆலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். மாவட்டத்தில் கலை இலக்கிய அமைப்பை வளர்ப்பதிலும், திருவொற்றியூர் பகுதியில் விடியல் கலை குழுவை வளர்த்தெடுப்பதிலும் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். தோழர் வீர. அருண் குடும்பத்தினர் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், வெகுஜன அமைப்புகளிலும் இணைந்து செயல்பட்டு வருபவர்கள். அவரது இணையர் தோழர் கலாவதி அவர்கள் கட்சி மற்றும் மாதர் சங்கத்திலும், கலை இலக்கிய அரங்கத்திலும் பணியாற்றியவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மரணமடைந்தார். தோழர் வீர அருண் அவர்களை இழந்து வாடும் மகள்கள் தோழர்கள் வெண்மணி, வெண்ணிலா, மகன் பகத்சிங் மற்றும் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
